இம்பால் : மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. மணிப்பூரில் குக்கி, மைதேயி இன மக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவ நிறுவனங்களுடன், மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது.
அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இன்று இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “கடந்த ஆண்டு மே மாதம் 3 முதல் இன்று வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் வருந்துகிறேன். இந்த ஆண்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே இந்த விஷயத்துக்காக வருத்தப்படுகிறேன். புத்தாண்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோம்.
கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அனைத்து மக்களும் உறுதியேற்போம். என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பாக, பயோமெட்ரிக் பதிவு செயல்முறை நடந்து வருகிறது. ஜனவரி 2025 முதல், சட்டவிரோத மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுக்க, ஆதார் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக, இந்த முயற்சி மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தொடங்கப்படும் என்று கூறினார்.
The post மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் பிரேன் சிங் appeared first on Dinakaran.