சென்னை: அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதுகுறித்து அதிமுக ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் பத்திரிகை மற்றும் ஊடகத்தில் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் கொடுக்கப்பட்ட புகார், பத்திரிகையில் வெளிவந்தது எப்படி? இது தவறான முன்னுதாரணமாகி விட்டது. சட்டத்துக்கு புறம்பாக உள்ளது. எந்த எப்ஐஆரும் வெளியிடகூடாது. ஆனால் வெளியில் கசிந்து விட்டது.
அதில் வந்த செய்தியில், அந்த பெண் அந்த சாருடன் கொஞ்சம் நேரம் இரு என்று செய்தியில் வந்துள்ளது. யார் அந்த சார்? என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். அதனால் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்கிறோம். இன்னும் காவல் துறையிடம் பதில் இல்லை. காவல் உயர் அதிகாரி 100க்கு புகார் வந்ததால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றோம் என்கிறார். அடுத்த நாள் உயர் கல்விதுறை அமைச்சர், உறுப்பினர் குழுவில் உள்ள யாரும் புகார் கொடுக்கவில்லை என்கிறார். இதுபோன்ற சந்தேகம் எழுப்பப்பட்ட காரணத்தினால்தான், அதிமுக போராட்டம் நடத்துகிறது. ஐடி விங்க் நிர்வாகிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி சென்று கண்ணாடி பாலம் திறந்து வைத்திருக்கிறார். நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அது. திருவள்ளுவர் – விவேகானந்தர் பாறையை இணைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தேன். மாநில அரசு பாதி பணம், ஒன்றிய அரசு பாதி பணம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. அதன்பிறகு கொரோனா என்பதால் இந்த பணி தடைபட்டது. பின்னர் திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது, பணிகள் நடைபெற்று, தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் காவல் துறையில் புகார் அளித்தாலும் எடுக்க மறுக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மீது தீவிரமாக விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல், ஒருவர்தான் குற்றவாளி என்று கூறுவதால்தான் சந்தேகம் வருகிறது. அமைச்சர் யாரையோ காப்பாற்ற குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் போராட்டம் வலுத்துக்கிட்டு இருக்கிறது. ஏதோ தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற இத்தனை அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தபோது, சிபிஐ விசாரணைக்கு நான் முதல்வராக இருந்தபோது உத்தரவிட்டேன். இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது தீவிரமாக விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.