×

மகரவிளக்கு கால பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு பின்னர் கடந்த 26ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். இதன் பின்னர் மேல்சாந்தி ஆழியில் தீ மூட்டினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கும். இன்று முதல் கணபதி ஹோமம் நெய்யபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும். வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. ஜனவரி 19ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதி காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல மகரவிளக்கு காலம் நிறைவடையும்.

நடை திறப்பை முன்னிட்டு நேற்று சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று முதல் ஜனவரி 11ம் தேதி வரை ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

The post மகரவிளக்கு கால பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Pooja Sabarimala Ayyappan Temple ,Thiruvananthapuram ,Sabarimalai ,Aiyappan Temple walk ,Maharagalaka Kala Pooja ,Mandala Pooja ,Sabarimala ,Maharagalaka Kala Pooja Sabarimala Ayyappan Temple Walk Opening ,
× RELATED திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை...