திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பழைய ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மழைக்காலத்தின் போது சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் குளத்தில் தேங்குவதால் மழைநீர் சேமிப்பாகவும், நிலத்தடி நீர் பாதுகாக்கவும் பயன்படுகிறது. இந்த நிலையில் குளம் சரியாக பராமரிப்பு இல்லாததால் சேறும், சகதியுமாகி துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, தனியார் சிலர் குப்பையையும் வீசி விடுகின்றனர்.
இதனால் மழைநீர் குளத்தில் தேங்க முடியாமல் வெளியேறி சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்த போது ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் என்பதால் மாநகராட்சியால் சீர் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெற்கு ரயில்வே துறை அதிகாரிகளிடம் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கழிவு நீர் குளமாக மாறி துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொது மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த குளம், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், கால்நடைகளுக்கு நீராதாரராகவும் பயன்பட்டு வருகிறது.
குளத்தை தூர்வாரி சீரமைத்தால் மழைக்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்கும். ஆனால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களும் பயன்படக்கூடிய குளத்தை ரயில்வே துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குளம் சீரழிந்து கிடப்பதோடு பொதுமக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post திருவொற்றியூரில் சேறும் சகதியுமான குளம்: தொற்றுநோய் பீதியில் மக்கள் appeared first on Dinakaran.