×

மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம்; மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்: 2 பிரிவில் வழக்கும் பாய்ந்தது

மேட்டூர்: மேட்டூர் சோதனைச்சாவடியில் உ.பி., சுற்றுலா பஸ் டிரைவர், கிளீனருடன் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில், மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் காரைக்காட்டில் தமிழக-கர்நாடக எல்லையில் மாவட்ட போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த வழியாக வெளி மாநில மதுவகைகள், கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க மேட்டூர் மதுவிலக்கு போலீசார், 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து, வாகனங்களில் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த வகையில், கடந்த 27ம் தேதி காலை அவ்வழியே கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலைக்கு சென்ற சுற்றுலா பஸ்சை மதுவிலக்கு ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகியோர் சோதனையிட்டனர். அந்த பஸ்சில் உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தை சேர்ந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

அப்போது, டிரைவர் சிவநாராயணன் (52), கிளீனர் அஜய் (20) ஆகியோர் தங்கள் வண்டியில் ஒன்றுமில்லை எனக்கூறி போலீஸ்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து, போலீஸ் ஏட்டுகளை இரும்பு பைப்பால் தாக்கினர். பதிலுக்கு ஏட்டுகளும் அவர்களை தாக்கினர். போலீசாருடன் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடம் வந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையிலான போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உ.பி., ஆன்மீக சுற்றுலா பஸ் டிரைவர் சிவநாராயணன், அஜய் ஆகியோர் பிடித்து வந்தனர். ஏட்டு செந்தில்குமார் புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பிறகு அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். உடனே அவர்கள், சுற்றுலா பஸ்சை எடுத்துக்கொண்டு கர்நாடகா சென்றனர்.

இதனிடையே, டிரைவர் சிவநாராயணன், போலீஸ் ஏட்டுகள் மீது கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இம்மோதல் விவகாரம் தொடர்பாக, மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் நேரடி விசாரணை நடத்தினார். அதில், சோதனைச்சாவடி பகுதிக்கு வந்த பேருந்து டிரைவரிடம் லைசென்ஸ், பர்மிட் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். சரியான பதில் வராததால், வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகியது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சிவநாராயணன் புகாரின் பேரிலும் வழக்கு நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். இதன்பேரில் கொளத்தூர் போலீசில், ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசியது, தாக்கியது என 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, டிஎஸ்பி ஆரோக்கியராஜ் நடத்திய துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து, எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் மீது, துறை ரீதியான மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கியவர்கள் மீது பதிலுக்கு போலீஸ் ஏட்டுகள் தாக்கிய நிலையில், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சோதனைச்சாவடி இருப்பதால் தான், போதை பொருட்கள் உள்ளிட்ட கடத்தல் தடுப்பு பணியும், கர்நாடகா போலீசார் கிராமங்களுக்குள் புகுந்து விசாரணை என்ற பெயரில் கிராம மக்களை அழைத்துச் செல்வதை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அதனால், சோதனைச்சாவடி போலீசாருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம்; மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்: 2 பிரிவில் வழக்கும் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Mettur Checkpoint ,SP ,Kolathur Karaikat ,Salem district ,Tamil Nadu-Karnataka ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் சதாசிவம் எம்எல்ஏ ஆய்வு