×

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 163 சவரன், ரூ.48 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்: மும்பையில் தனிப்படையினர் அதிரடி

ஜோலார்பேட்டை: கோவையில் உள்ள எஸ்.கே.வீதி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் நவீன்குமார்(26). இவர் கோவையில் நகைக்கடை வைத்துள்ளார். மேலும் ஆர்டரின்பேரில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு நகைகள் செய்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 163 சவரன் நகைகள், ரூ.48 லட்சம் பணத்துடன் கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது தூங்கிக்கொண்டிருந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென கண்விழித்தபோது அவரது அருகில் நகை, பணத்துடன் வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி மும்பையில் ராகுல் பெட்டாகர், பஞ்சாரங்க புரியா துர்லே, சுனில் லட்சுமணன், தானு சாக்காடு ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ₹1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைதானவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் விசாரணையில், கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி மும்பையில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான மாருதி ராஜாராம் பெட்டகர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ₹9 லட்சம், 5 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொள்ளை வழக்கில் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், மேலும் ஒரு குற்றவாளியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவரது சிக்னலை ஆய்வு செய்தனர். இதையடுத்து கடந்த 23ம் தேதி மும்பைக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கேயே முகாமிட்டு குற்றவாளியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் உல்மானாபாத் மாவட்டம், பரன்டா பகுதியை சேர்ந்த கேனே என்பவரின் மகன் அர்ஜூன் கேனே காலே(40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் உருக்கி வைத்திருந்த 12 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்து, குற்றவாளியை நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருப்பத்தூர் ஜேஎம்-3 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

The post ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 163 சவரன், ரூ.48 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்: மும்பையில் தனிப்படையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jolarpettai ,Mumbai ,Naveen Kumar ,Srinivasan ,S.K. Veedi Selvapuram ,Coimbatore ,India ,Dinakaran ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் நகை, 7...