இந்த புத்தகக் காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்திற்கு ஸ்டால் எண்: 329, 330 ஆகிய இரண்டு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27ம் தேதி மாலை கண்காட்சி தொடங்கியது. தொடங்கப்பட்ட 3 நாட்களில் கிட்டத்தட்ட 40,000த்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்தார். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரதி அறக்கட்டளை சார்பில் எண்: 102 அரங்கில் பார்வையற்றவர்கள் எழுதிய பல்வேறு புத்தங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த அரங்கில் கவிதை, சிறுகதை, ஆய்வு கட்டுரைகள், நாவல், அரசு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. மாற்றுத்திறனாளி கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என அறக்கட்டளை நிறுவனர் குமார் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் குவிந்தனர்.
பள்ளி விடுமுறை என்பதால் தங்கள் குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆங்கில புத்தகக் கடையில் விற்பனை படுஜோராக இருந்தது. குழந்தைகளுக்கான வண்ண புத்தகங்கள், அட்லஸ் உள்ளிட்ட புத்தகங்களை வாசகர்கள் தேடிப் பிடித்து வாங்கினர். காலை 11 மணிக்கு தொடங்கிய புத்தகக் காட்சி இரவு 8.30 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அரங்குகளிலும் கூட்டம் அலைமோதியதால் கண்காட்சி களை கட்டி இருந்தது.
* கண்காட்சியில் இன்றைய நிகழ்வு
“விருந்தும் மருந்தும்” என்ற தலைப்பில் ஞானசம்பந்தம், சின்னஞ்சிறு கதைகள் பேசி என்ற தலைப்பில் எழுத்தாளர் மாலன் பேச உள்ளனர்.
The post விடுமுறை நாளான நேற்று கூட்டம் அலைமோதியது களைகட்டிய புத்தக கண்காட்சி: 3 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை appeared first on Dinakaran.