ராஞ்சி: ஜார்கண்ட், சட்டீஸ்கரில் தேர்தலை சீர்குலைத்த நக்சல் ஆதரவாளர்கள், நக்சல் தலைவனுடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தியது. ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹில் உள்ளிட்ட பகுதியில் நக்சல் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு வட்டாரங்கள் கூறுகையில், ‘சந்தேகத்திற்கிடமான மற்றும் நக்சல் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் பிற இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களின் வீடுகளில் இருந்து, செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்ட பிற குற்றவியல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நக்சல் தீவிரவாதி கிருஷ்ணா ஹன்ஸ்டா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் சட்டீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்த் மற்றும் தம்தாரி மாவட்டங்களில் உள்ள ராவண்டிக்கி, செம்ரா, மைன்பூர், கோரகான், கெரபஹாரா மற்றும் கரியாபந்த் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 11 சந்தேக நபர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போது நடந்த தாக்குதலில் தலைமை கான்ஸ்டபிள் ஒருவர் நக்சல்களால் கொல்லப்பட்டார். மேற்கண்ட சோதனையின்போது, நக்சலைட்களின் துண்டு பிரசுரங்கள், கையேடுகள், செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள், ரூ 1.5 லட்சம் ரொக்கம் மற்றும் பிற குற்றவியல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை கைது செய்துள்ளோம்’ என்று கூறின.
The post தேர்தலை சீர்குலைத்த நக்சல் ஆதரவாளர்கள்: ஜார்கண்ட், சட்டீஸ்கரில் என்ஐஏ ரெய்டு appeared first on Dinakaran.