*படகு சவாரி செய்து உற்சாகம்
குன்னூர் : தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் குன்னூரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின்நோஸ், லாம்ஸ்ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது.
பூங்காக்களில் உள்ள வண்ணமயமான மலர்களை கண்டு ரசித்து வருவதுடன், சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் சிம்ஸ் பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் உற்சாக படகு சவாரி செய்து வருகின்றனர். இருப்பினும் குன்னூரில் தற்போது மழையுடன் கூடிய மேகமூட்டம் காரணமாக டால்பின்நோஸ், லாம்ஸ்ராக் போன்ற காட்சிமுனை பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் குன்னூரின் முக்கிய சாலைகளான குன்னூர் – மேட்டுப்பாளையம், குன்னூர்- ஊட்டி, குன்னூர்-கோத்தகிரி, குன்னூர்-ஆடர்லி போன்ற சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், உணவு விடுதிகள், ஓட்டல்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுதிகள் மற்றும் ஹோட்டல்களை கண்டு, சாலையோரங்களில் நிறுத்தி செல்லப்படும் வாகனங்களால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களும், கடைவீதிகளும் பயணிகளின் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தொடர் விடுமுறையால் குன்னூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.