போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. தொடர் மழையால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை பாசனம் மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும், கால்வாய் இணைப்புகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரியஏரியில் இருந்து, கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்காக, கடந்த 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த 2,397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதையடுத்து, விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது. இதனால், இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பாரூர் பெரிய ஏரியிலிருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டாம் போக நெல் சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.
தற்போது, இரண்டாம் போக நெல் சாகுபடி பரப்பு, கடந்தாண்டை காட்டிலும் ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக பயிரிடப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் நெல் நடவில் ஈடுபட்டுள்ளதால், கூலி ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களை வரவழைத்து, நெல் நடவு பணியை மேற்கொண்டு வருகிறோம்,’ என்றனர்.
The post போச்சம்பள்ளி தாலுகாவில் இரண்டாம் போக நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.