இந்நிலையில், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் கடந்த 23ம் தேதி இரவு புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இந்நிலையில், வரப்பாளையம் அருகே 24ம் தேதி காலை கூட்டத்தில் இருந்து பிறந்து 1 மாதமான குட்டி யானை ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர். மேலும், குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அப்போது, பன்னிமடை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த யானை பிரேத பரிசோதனைக்கு பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. உயிரிழந்த பெண் யானை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து இருப்பதாகவும், யானையின் மடியில் பால் வடிந்து இருந்ததால் இந்த யானை குட்டி யானையின் தாய் யானையாக இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து தாயை இழந்த குட்டியை, யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பொன்னூத்து அம்மன் கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டத்துடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், இந்த குட்டியை இரவு வரை சேர்த்து கொள்ளாததால், அந்த குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், நேற்றும் அப்பகுதிக்கு அருகில் உள்ள மற்ற இரண்டு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யானை கூட்டம், குட்டி யானையை சேர்க்கவில்லை எனில், உயரதிகாரிகள் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை முயற்சி appeared first on Dinakaran.