×

உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் ஆபத்து; கண்ணுக்கு தெரியாத சக்திகள் மணிப்பூரை எரிக்கின்றன: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி: கண்ணுக்கு தெரியாத சக்திகள் மணிப்பூரை எரிக்கின்றன என்று மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல் கவலையுடன் தெரிவித்தார். மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் அங்கு எதுவும் இருக்காது. கண்ணுக்குத் தெரியாத சக்திகள் மணிப்பூரை எரித்துக் கொண்டுள்ளன.

அவை அங்கு வன்முறையை ஊக்குவிக்கின்றன. வன்முறையை ஊக்குவிக்கும் கை யாருடையது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். இந்த வன்முறையை தீவிரமாக வைத்திருப்பதில், யாரோ ஒருவர் ஆர்வம் காட்டுகிறார் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் போது, திடீரென்று புதிய வன்முறை அலை எழுகிறது. இதன் பின்னணியில் சில சக்திகள் உள்ளன என்பது உறுதியாகிறது. இந்த சக்திகள் மணிப்பூருக்கு வெளியேயும், உள்ளேயும் இருக்கலாம். அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியாளர்களை மணிப்பூருக்கு அனுப்புவது மூலம் பெரிதாக முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. வன்முறையால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை’ என்றார்.

மணிப்பூரில் கிட்டத்தட்ட 19 மாதங்களாக இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை சம்பங்கள் நடந்து வருகிறது. தொடர் வன்முறை மற்றும் பதிலடி தாக்குதல்களால் அங்கு கூடுதல் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக இதுவரை மணிப்பூரில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, மணிப்பூரில் ராணுவம், அசாம் ரைஃபிள்ஸ், சிஆர்பிஎஃப் மற்றும் மணிப்பூர் போலீசார் உட்பட சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியாளர்களை அனுப்புவது மூலம் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சிகளும் முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் ஆபத்து; கண்ணுக்கு தெரியாத சக்திகள் மணிப்பூரை எரிக்கின்றன: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவலை appeared first on Dinakaran.

Tags : chief justice ,Supreme Court ,New Delhi ,Former Chief Justice of ,Manipur High Court ,Siddharth Mirutul ,Manipur ,Sidharth Miridul ,State High Court of Manipur ,High ,Court ,
× RELATED மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா?...