மதுரை: மதுரையில் நேற்று எம்ஜிஆர் – ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பண்டம். ஏழை மக்கள் வாங்குகின்றனர். இதற்கு ஜிஎஸ்டி வரி உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அபரிதமான வருவாய் வருவதாக சொல்கிறார்கள். இதற்கெல்லாம் வரி விதிக்கலாமா? என்றார்.
பின்னர், ‘‘எம்ஜிஆருக்கும், பிரதமர் மோடிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார், உங்களை கூட்டணிக்கு அழைக்கிறாரா?’’ என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘‘எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. அதிமுக அழியாமல் இருக்க பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என டிடிவி.தினகரன் தனது கருத்தை சொல்லி இருக்கிறார்.
அதேசமயம், அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மாற்றுக் கட்சியினரின் கருத்துக்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி முடிவெடுப்பார்’’ என்றார்.
The post குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு வரி உயர்த்துவதா..? செல்லூர் ராஜூ கண்டனம் appeared first on Dinakaran.