×

வலுவிழக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னை, புறநகரில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: ‘வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுவிழக்கிறது’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (டிச.24) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.24) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. மேலும் இது, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வழுவிழக்கக் கூடும். லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (டிச.24) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.25ம் தேதி, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.26ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.27ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.28 மற்றும் டிச.29ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.30ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், இன்றும் (டிச.24) நாளையும் (டிச.25) வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில், இன்று (டிச.24) தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.25ம் தேதி, மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post வலுவிழக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னை, புறநகரில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Bay of Bengal ,Chennai Meteorological Department ,
× RELATED வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள...