ராமேஸ்வரம் : பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, வீடியோவில் பதிவு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் அனைவரும் அக்னி தீர்த்த கடற்கரையில் உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளனர். பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்ற குடும்பத்தினர், அங்குள்ள டைல்ஸ் சுவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்தக் குடும்பத்தினர் நிர்வாகத்தினரிடம் கூறி சத்தம் போட்டதால் அங்கிருந்த பக்தர்கள், பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து ஆவேசம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், கோயில் போலீசார் உடைமாற்று அறையை சோதனை செய்து அங்கிருந்த மீரா மைதீன் (38) என்பவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரம் தம்பியான்கொல்லை தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரும் உடை மாற்றும் அறையை வாடகைக்கு எடுத்து நடத்தியது தெரிய வந்தது. இருவரும் பெண்கள் ஆடை மாற்றுவதை ரகசிய கேமராவில் வீடியோ எடுத்து பார்த்து வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனை செய்தனர். அதில், ஏராளமான அந்தரங்க வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து போலீசார் ரகசிய கேமரா, செல்போன், மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து கூடுதல் விசாரணை நடத்தினர்.
மேலும் 5 மாதத்திற்கு முன்பே 3 ரகசிய கேமராக்கள் வாங்கி தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளது விசாரணையில் தெரிந்தது. கோயில் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அந்தரங்க வீடியோக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளதா என சைபர் கிரைம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தி பெண்களின் அந்தரங்கம் பதிவு appeared first on Dinakaran.