பூந்தமல்லி: மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் பால்கனியின் பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் இவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பித்து சென்றுள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார்குமார் கார்வர்(32). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நான்கு மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உள்ள பேராசிரியரின் மனைவி ஹகன்ஷா நேற்றுமுன்தினம் இரவு தன் கணவர் பிரகார்குமார் கார்வரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் எடுக்காததால் அவருடன் பணிபுரியும் சோனி என்பவருக்கு ஹகன்சா தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் உள்ள பால்கனி கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் பேராசிரியர் பிரகார் குமார் கார்வர் தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரகார் குமார் கார்வர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா, எப்படி அவர் உயிர் இழந்தார் என்று பல்வேறு கோணங்களில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் யூடியூபை பார்த்து முகத்தில் பாலித்தீன் கவரால் மூடிக்கொண்டு அவர் சுய இன்பம் செய்யும்போது மூச்சு திணறி இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டின் பால்கனியின் பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் இவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை முடிந்த பிறகும், செல்போனில் தடயங்கள் ஏதாவது கிடைத்தால் மட்டுமே இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post மதுரவாயிலில் கல்லூரி பேராசிரியர் மர்ம சாவு: தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்டு கழிப்பறையில் சடலமாக கிடந்தார் appeared first on Dinakaran.