கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் திடீர் நகரைச் சேர்ந்தவர் சிவா(48). இவருடைய மகன் பரத்(15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் நிறைவுபெற்ற நிலையில் நண்பர்களுடன் வழுதலம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக பரத் தனது 10க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நீச்சல் தெரியாத பரத் திடீரென கிணற்றில் பாய்ந்து குதித்துள்ளார்.
கிணற்றில் குதித்த பரத் மேலே வராததால் அங்கிருந்த சக மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்து தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாக கிணற்றில் மாயமான பரத்தை தேடியுள்ளனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பரத்தை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் பரத்தின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் பரத்துடன் குளிக்கச்சென்ற சக மாணவர்கள் குறித்தும், உயிரிழப்புக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவனின் குடும்பத்தார் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது கிணற்றில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் பலி appeared first on Dinakaran.