×

சிறுபான்மையினர் தொடர்ந்து வாக்களிப்பு வலுவான திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: திருமாவளவன் பேட்டி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: விசிகவை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதி. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நம்புகிறேன். இஸ்லாமியர்கள் திமுக கூட்டணியை நம்புகிறார்கள். திமுக கூட்டணி சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அதனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்ந்து இந்த கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பத்திரிகையாளர்களை அழைத்து, அம்பேத்கர் குறித்து தான் பேசியதை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் திரித்து பேசுகின்றன என்றார். அம்பேத்கரை கடவுளோடு ஒப்பிட்டு பேசியதில் அவருக்குள்ள ஒரு வெறுப்பு அல்லது அம்பேத்கர் மீதான குறைவான மதிப்பீடு வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிற சூழலில், பிரதமர் மோடி உட்பட அமித்ஷா பேசியது தவறு இல்லை என்று நியாயப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

எக்ஸ் தளத்தில் அந்த பதிவுகளை முற்றிலும் நீக்க வேண்டும் என்றெல்லாம் அரசின் சார்பிலேயே வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம்தேதி இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் ஒரே நேரத்தில் மாநில வாரியாக ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். விசிக சார்பில் 28ம் தேதி தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டமாக அந்த போராட்டம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிறுபான்மையினர் தொடர்ந்து வாக்களிப்பு வலுவான திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Thirumavalavan ,Trichy ,VKC ,Trichy airport ,2026 elections ,Tamil Nadu ,Vazhuvrimai ,Katchi ,Velmurugan… ,
× RELATED திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன்