×

தெலங்கானாவில் பரபரப்பு சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் வீட்டுக்கு தீ வைப்பு

*தாமதமாக வந்த போலீசார் மீதும் தாக்குதல்

திருமலை : வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்தனர். மேலும் தாமதமாக வந்ததாக கூறி போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரைச் சேர்ந்தவர் போஷெட்டி(21).

அருகிலுள்ள ஒரு பகுதியில் 15 வயது மனநலம் பாதித்த சிறுமி தனது பெற்றோருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியிடம், போஷெட்டி சாக்லெட் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது போஷெட்டி வீட்டில் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டது. இதையறிந்து உடனடியாக அங்கு சென்று கதவை தட்டினர். ஆனால் சுமார் 3 மணி நேரமாகியும் போஷெட்டி கதவை திறக்கவில்லையாம்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், செல்போன் மூலம் இச்சோடா நகர போலீசாருக்கு தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் வர காலதாமதமானதாம். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து போஷெட்டி வீட்டுக்கு தீ வைத்தனர். இதற்கிடையில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். போஷெட்டிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் போலீசார் தாமதமாக வந்ததாக கூறி கிராம மக்கள் கற்கள், கட்டைகளால் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர், 5 போலீசார் காயமடைந்தனர்.

பாலியல் பலாத்காரம் தொடர்பாக போஷெட்டி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தெலங்கானாவில் பரபரப்பு சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் வீட்டுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,
× RELATED மோதல் முற்றுகிறதா? பாலகிருஷ்ணா, அல்லு...