×

ஆழிப்பேரலை உருக்குலைத்து 60 ஆண்டுகள் நிறைவு புத்துயிர் பெறுகிறது புயல் அழித்த நகரம்

Dhanushkodi, Revival* வளர்ச்சிப்பணிகளால் புதுப்பொலிவடைகிறது தனுஷ்கோடி
*உள்ளூர் மீனவ மக்கள், சுற்றுலாப்பயணிகள் வரவேற்பு

ராமேஸ்வரம் : கோரப்புயலால் தனுஷ்கோடி கடல் நகரம் உருக்குலைந்து நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளால் மீண்டும் சுற்றுலா நகரமாக புத்துயிர் பெற்று வருகிறது.இந்தியாவின் முக்கிய புனிதத் தலங்களுள் ஒன்று ராமேஸ்வரம். இதன் அருகே உள்ள தனுஷ்கோடியில் சங்க காலம் முதல் தமிழகத்திற்கு படையெடுத்து வந்த மன்னர்கள், போரில் வென்றப் பின் புனித நீராடி, வெற்றித் தூண்களை நிறுவி சென்றதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்லும் வாயிலாக தனுஷ்கோடி உருவெடுத்தது.

ரயில் போக்குவரத்து:

1870களில் ஆங்கிலேய அரசால் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள தனுஷ்கோடியிலும், இலங்கையின் தலைமன்னாரிலும் துறைமுகங்கள் கட்டப்பட்டது.

இதே காலக்கட்டத்தில் பாம்பன் கடலில் ரயில் பாலமும் கட்டப்பட்டு மானாமதுரை முதல் தனுஷ்கோடிக்கு ரயில் பாதையும் அமைக்கப்பட்டது. 1914ம் ஆண்டில் கப்பல் துறைமுகம், ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து துவங்கியது.

கப்பல், ரயில் போக்குவரத்து துவங்கிய பின் தனுஷ்கோடியில் ஆங்கிலேய அரசின் நிர்வாக கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டன. பூர்வகுடி மீனவ மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், அரசுப்பணி மற்றும் தொழில், வியாபார நிமித்தமாக பலதரப்பட்ட மக்கள் குடியேற்றமும் நடந்தது.
கடலும், மணல் திட்டுகளும், கோயிலும், குடிசைகளுமாக இருந்த தனுஷ்கோடி நகரம், கப்பல் – ரயில், அலுவலக கட்டிடங்கள், கோயில்கள், குடியிருப்புகள், மீன் பிடித்தல், புனித நீராடுதல் என பரபரப்பான பகுதியாக மாறியது. வெகுவிரைவில் தமிழகத்தில் ஆங்கிலேய அரசின் முக்கிய நிர்வாக கேந்திரங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

Dhanushkodiபுரட்டிப்போட்ட புயல்:

இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து பலதரப்பட்ட மக்களும் வந்து செல்லும் இடமாக விளங்கி வந்த தனுஷ்கோடி, ஒரே இரவில் கடலில் மூழ்கி அழிந்து போனது. 1964ம் ஆண்டு டிச. 18ம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் டிசம்பர் 24ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் தனுஷ்கோடியை கொடூரமாக தாக்கியது. இதில் தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கி உருக்குலைந்து போனது. பல நூறு பேர் பலியாகினர். புயலுக்குப்பின் பாலைவனமாக மாறிப்போன தனுஷ்கோடியில் இடிந்த கட்டிடங்கள் மட்டுமே எச்சங்களாய் காட்சியளித்தன. ஆள் அரவமற்றுப்போன தனுஷ்கோடியில் மீண்டும் பூர்வகுடி மீனவ மக்கள் குடியேற துவங்கினர். இவர்கள் தற்போது வரை பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

சுற்றிப்பார்க்க வருகை:

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள சேது தீர்த்தத்தில் பாவம் நீங்க நீராடி வழிபாடு செய்கின்றனர். புயலின் எச்சங்களாய் நிற்கும் கட்டிடங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்காக ஏராளமான மீன் உணவகங்கள், தேநீர், குளிர்பான கடைகளும் உள்ளது. கடல் சங்கு, சோவி கைவினைப்பொருள் விற்பனை கடைகளும் அதிகளவில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் தனுஷ்கோடியை மீண்டும் புனரமைத்து கடற்கரை சுற்றுலா நகரமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மேம்படுத்த முடிவு:

வரலாற்று சிறப்பு வாய்ந்த தனுஷ்கோடியை மேம்படுத்திட ஒன்றிய அரசும், மாநில அரசும் முன்வந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றிய அரசு ரூ.54 கோடி செலவில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 கிமீ தூரத்திற்கு விரிவாக்கம் செய்தது. இச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் இரு கடலும் சங்கமிக்கும் எல்லை வரை தங்களின் வாகனங்களில் சென்று வருவதால் ஒரு புதிய அனுபவத்தை உணர்கின்றனர். தமிழக அரசும் தனுஷ்கோடியில் சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அரசு பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், பசுமை பஸ் இயக்குவதற்கான முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

புதிய கலங்கரை விளக்கம்:

2020ம் ஆண்டு ஒன்றிய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை சார்பில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் நலன் கருதி ரூ.7 கோடி செலவில் தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகள் இதன் உச்சியில் அமைந்துள்ள மாடத்தில் இருந்து தனுஷ்கோடி கடல் மணல்திட்டுகள், ராமேஸ்வரம் தீவுப்பகுதியை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை மீண்டும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ரயில் பாதை அமைக்கவும், தனுஷ்கோடியில் ரயில் நிலையம் அமைக்கவும் பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய வழித்தடத்தில் தண்டவாளம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கப்பல் போக்குவரத்து:

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கான ஆய்வுகளும் நடைபெற்றது. இதில், புயலுக்குப் பின் தனுஷ்கோடியின் நிலப்பரப்பு மற்றும் புவியியல் மாற்றத்தால் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இல்லாதது தெரியவந்தது. எனவே ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கட்டிடங்கள் புதுப்பிப்பு: தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாக்கவும், சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கவும் தமிழக அரசு பல கோடி செலவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கோரப்புயலுக்கு பின் இன்று வரை 60 ஆண்டுகளாக மின் இணைப்பு இன்றி வாழும் பூர்வகுடி மீனவர்கள் சோலார் மின்சாரத்தையே நம்பியுள்ளனர். மீனவ மக்களின் தற்காலிக குடிசைகளில் அத்தியாவசிய தேவைக்காக சோலார் பேனல் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் தனுஷ்கோடி நகரம் 60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. விரைவில் முழுமையான சுற்றுலா நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விரைவில் சுகாதார வசதிக்கு ஏற்பாடு

தனுஷ்கோடியில் இரண்டு அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. 500க்கும் மேற்பட்ட மீனவ மக்களும் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், பள்ளி குழந்தைகள் அனைவரும் சாதாரண மருத்துவத்திற்கு கூட 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இப்பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவ மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது சுகாதார இயக்குனரகம் தனுஷ்கோடியில் சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி அமைக்க ஒன்றிய, மாநில சுகாதார அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. இது நிறைவேறும் பட்சத்தில் அங்கு பகல் நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய மருத்துவர், செவிலியர் பணிபுரியும் வகையில் சுகாதார மையம் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்னல் இல்லாமல் சிரமம்

தனுஷ்கோடியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் நிலையில், செல்போன் சிக்னல் பெரும் பிரச்னையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் செல்போன் சிக்னல் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பணியில் இருக்கும் காவலர்கள் அவசர தேவைக்களுக்கு தகவல் தெரிவிக்க கூட செல்போனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நவீன காலத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள செல்போன் சேவையை பயன்படுத்த சிக்னல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

The post ஆழிப்பேரலை உருக்குலைத்து 60 ஆண்டுகள் நிறைவு புத்துயிர் பெறுகிறது புயல் அழித்த நகரம் appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Rameswaram ,India's… ,
× RELATED மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை