×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது வட தமிழக கடலோரத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில், வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது. இது தவிர, தஞ்சாவூர், கோவை, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. அதேபோல, சென்னை, நீ்லகிரி, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (24ம்தேதி) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த நிகழ்வின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நாளை (24ம்தேதி) வட தமிழக கடலோரத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25ம் தேதியிலும் இதேநிலை நீடிக்கும். 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி வரை இருக்கும். மேலும், இன்றும் நாளையும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55கிமீ வேகத்தில் வீசும். 25ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது வட தமிழக கடலோரத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : north Tamil Nadu ,Chennai ,Bay of Bengal ,south Andhra ,Tamil Nadu ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழை நீடிக்கும்