×

அதிரடியாக குறைந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாளில் 880 ரூபாய் சரிந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.240 குறைந்தது. கடந்த 3 நாளில் மட்டும் ரூ.880 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது. இதனால் தங்கம் விலையானது கடந்த 2010ம் ஆண்டு ஒரு பவுனுக்கு ரூ.10ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அடுத்த 14 ஆண்டுகளில் ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்த சில நாட்களிலையே தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. பவுனுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைந்தது.
அந்த வகையில் தங்கத்தின் விலையானது தற்போது குறைந்து வருகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.7,040க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு பவுன் ரூ.56,320க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.880 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

The post அதிரடியாக குறைந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி: 3 நாளில் 880 ரூபாய் சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித்...