தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை: அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு 43,283-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்களைக் கொண்டிருக்கிறது.

1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள், யுனஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உள்ளிட்ட உலகோரை கவரக்கூடிய பல்வேறு சுற்றுலாத்தளங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்போடு விளங்குகிறது. தொன்மையும் வளமும் கொண்டு திகழ்கின்ற தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்கள் உலக முழுவதும் கவனம் பெறுகின்ற வகையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குத் திட்டத்துடன் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1971 ஆம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தைத் தோற்றுவித்தார். அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரமாக மாற்ற உதவும் ‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023’ ஐ வெளியிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12% ஆக உயர்த்துதல், தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனும் உயரிய குறிக்கோளுடன் சுற்றுலாக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி மாநாடுகளை நடத்துதல் – பங்கேற்றல், முதலீடுகளை ஈர்த்தல், கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனோ பெருந்தொற்றில் உலக அளவில் சுற்றுலாத்துறைப் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் முதலமைச்சரின் கவனம் மிக்க செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை புத்துயிர்பெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 2023 ஆண்டில் 28.71 கோடியாக உயர்த்தி திராவிட மாடல் அரசு சாதனைப் படைத்திருக்கிறது. மேலும் பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா துறை பல்வேறு பன்னாட்டு, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை: அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: