தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை- ஓசூர் சாலையில் பஞ்சேஸ்வரம் கிராமம் அருகே ஜல்லி பாரம் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளிலிருந்து தூசி பரவுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை -ஓசூர் சாலையில் பஞ்சேஸ்வரம் கிராமம் அருகே தனியார் ஜல்லி கிரசர் உள்ளது. அங்கிருந்து 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம்.சாண்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
கிரசரிலிருந்து பஞ்சேஸ்வரம் கிராமம் அருகே தேன்கனிக்கோட்டை ஓசூர் இணைப்பு சாலை வரை உள்ள மண் சாலையில் இருந்து திரும்பி லாரிகள் ஓசூர் நோக்கி செல்கின்றன. லாரிகளில் இருந்து கொட்டும் மண் சாலையில் இடது புரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொட்டி கிடக்கின்றது. இதனால் சாலையே புழுதியாக மாறியுள்ளது. புழுதியில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல், வலது புறம் செல்லும் நிலை உள்ளது.
புழுதி பரப்பதால் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஓசூர் நோக்கி செல்லும் போது, டிப்பர் லாரிகள் பின்னால் செல்லும் இருசக்கர வாகனங்களில் தூசி பரவுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஜல்லி கிரசர் முதல் பஞ்சேஸ்வரம் கிராமம் இணைப்பு சாலை வரை, தினமும் கிரசர் உரிமையாளர்கள் மூலம் டிராக்டர்கள் கொண்டு தண்ணீர் ஊற்றப்படுகின்றது.
அதேபோல், தேன்கனிக்கோட்டை – ஓசூர் சாலையில் மண் கொட்டியுள்ள பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும், சாலையில் கொட்டும் மண்ணை உடனுக்குடன் அகற்றி விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேன்கனிக்கோட்டை- ஓசூர் சாலையில் ஜல்லி பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.