ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் இல்லை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடைசி நாளில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, அரசியலமைப்பு 129வது சட்ட திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மக்களவை அலுவல் பட்டியலில் 2 மசோதாக்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் நடைமுறை சாத்தியமற்றது என்றும் கூறி வருகின்றன.

மக்களவையுடன் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் சில சட்டப்பேரவைகளை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்க வேண்டியிருக்கும். இது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கலை ஒன்றிய அரசு கடைசி நிமிடத்தில் திடீரென ஒத்தி வைத்துள்ளது.

இன்றைய தினத்திற்கான திருத்தப்பட்ட மக்களவை அலுவல் பட்டியலை மக்களவை தலைமைச் செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், 2 மசோதாக்களும் இடம் பெறவில்லை. இதற்கு பதிலாக துணை மானிய கோரிக்கை மசோதா இடம் பெற்றுள்ளது. துணை மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது.

இதனால் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பலம் வேண்டும். ஆனால் ஆளும் பாஜ கூட்டணிக்கு அத்தகைய பலம் இல்லை. எனவே, அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி, வரும் பிப்ரவரியில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* அரசியலமைப்பின் 129வது சட்ட திருத்தத்தின் மூலம், சட்டப்பேரவை தேர்தல்களில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும். மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அனுமதிக்கும் வகையில் அரசியல் சாசன சட்டத்தில் 82ஏ எனும் புதிய பிரிவு சேர்க்கப்படும்.

* இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் அமலுக்கு வரும்.

* அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் மக்களவை பதவிக்காலத்துடன் சேர்த்து அனைத்து சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் முடிவடையும்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் இல்லை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடைசி நாளில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: