×

நட்புறவு திருவிழாவில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் குழு வியட்நாம் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: இந்தியா – வியட்நாம் நட்புறவு திருவிழாவில் பங்கேற்கபதற்காக நாளை தமிழக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்ட 35 பேர் குழு வியட்நாம் செல்கிறது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எம்எல்ஏக்கள் வாழ்த்து பெற்றனர். இந்தியா – வியட்நாம் மக்கள் நட்புறவு திருவிழா வியட்நாமில் வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

இவ்விழாவில் கலந்து கொள்ள 35 பேர் கொண்ட இந்திய குழு, சென்னையில் இருந்து நாளை புறப்படுகிறது. இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோரோடு கலைக் குழுக்களும் வியட்நாம் செல்கிறது. அங்கு அவர்கள் பல்வேறு நட்புறவு கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்திய கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இந்த பயணத்தின் போது இந்திய வியட்நாம் நட்புறவு சங்கத்தின் தலைவர், வியட்நாம் அமைச்சர் நகுயென் த்ன்ஹ ஹை சந்தித்து கலந்துரையாடல் நடத்துகின்றனர். குறிப்பாக நோய்பாய் நகரம், ஹோச்சிமின் நகரம், வின் புக் காணம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களையும் இந்த குழு பார்வையிட இருக்கிறது. முன்னதாக வியட்நாம் செல்லும் எம்எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

The post நட்புறவு திருவிழாவில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் குழு வியட்நாம் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Vietnam ,Friendship Festival ,Principal ,M.U. K. ,Stalin ,Chennai ,India-Vietnam Friendship Festival ,S. Balaji ,C. V. M. B. ,Eilarasan ,K. ,India ,M. K. ,
× RELATED திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்