சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புழல் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்று (14.12.2024) காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Redhills Surplus Course) ஏரியிலிருந்து நேற்று 13.12.2024 காலை 9.00 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று 14.12.2024 பிற்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும். எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புழல் ஏரியிலிருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.