- EVKS
- இளங்கோவன்
- Mutharasan
- சென்னை
- காங்கிரஸ்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
சென்னை; சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல் நலக்குறைவால் இன்று மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.சமூக சீர்திருத்த இயக்கத்தின் பாரம்பரிய பெருமை கொண்ட பெரியார் குடும்பத்தில் ஈவெகி சம்பத் – சுலோச்சனா தம்பதியருக்கு 1948 டிசம்பர் 21ம் ஆண்டில் பிறந்த இளங்கோவன், சிறுவயது முதலே அரசியல் மற்றும் இயக்க சூழலுக்குள் வளர்ந்தவர்.இளங்கோவன் பள்ளிக் கல்வி பயின்ற காலத்தில் இருந்து காங்கிரஸ் இயக்கத்தோடு பயணித்து வந்தவர்.
காமராஜர், கவிஞர் கண்ணதாசன், பழ நெடுமாறன், குமரி அனந்தன் போன்ற தலைவர்களின் மாறாத பாசத்தையும், அன்பையும் பெற்றவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். கலைஞர், ஜெ.ஜெயலலிதா. ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, இரா.நல்லகண்ணு, ஜி.கே மூப்பனார், என்.சங்கரய்யா போன்ற அரசியல் தலைவர்களோடு இணைந்து செயல்பட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருமுறை பொறுப்பேற்று செயல்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களின் நட்பை பெற்று, தொடர்ந்து உறவில் இருந்து வந்தவர்.
சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1984 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டி பாளையம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று, ஒன்றிய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி – சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர். உயர்மட்டத் தலைவர்களோடு மட்டும் அல்லாமல் அடிமட்டத் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் இரண்டறக் கலந்து பழகி வந்தவர்.
மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக பேசுபவர். இதனால் ஏற்படும் சர்ச்சைகள் பற்றி கவலைப்படாதவர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வலிமை பெற்று, வகுப்புவாத, மதவெறி சக்திகளை எதிர்த்து போராடும் காலத்தில் இளங்கோவன் மறைவு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு பேரிழப்பாகும்: முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.