×

கல்லாறு பர்லியாறு இடையே மலையேற்றத்திற்கு இளைஞர்கள் இளம்பெண்களிடையே ஆர்வம்

*100க்கும் மேற்பட்டோர் மலையேற்றம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு-பர்லியாறு இடையே 3.5 கிமீ தொலைவிற்கு மலையேற்றம் (ட்ரெக்கிங்) திட்டம் துவங்கியது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9780 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள், பறவை ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் இடையே மலையேற்றம் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு முதல் பர்லியாறு வரை சுமார் 3.5 கிமீ தொலைவிற்கு மலையேற்றம் தற்போது துவங்கி உள்ளதால் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள், இளம்பெண்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் இந்த மலையேற்ற சுற்றுலாவிற்கு ஆர்வத்துடன் இணையதளம் வாயிலாக புக்கிங் செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லாறு-பர்லியாறு வழித்தடத்தில் மலையேற்றம் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து பேசிய மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின், ‘‘கல்லாறு-பர்லியாறு இடையே சுமார் 3.5 கிமீ மலையற்றம் செல்ல விருப்பமுள்ளவர்கள் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ரூ.949 மற்றும் 5% ஜிஎஸ்டியுடன் சேர்த்து சுமார் ரூ.1000 செலுத்த வேண்டும். தொடர்ந்து மலையேற்றம் வரும் நபர்களின் தொடர்பு எண்கள் எங்களுக்கு கிடைத்து விடும்.

வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 3 தினங்களில் காலை 9 மணி, 11 மணி என இரு முறை இந்த மலையேற்றம் அழைத்து செல்லப்பட்டு வருகிறது. வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மலையேற்ற சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். மலையேற்றம் செல்பவர்களுடன் கல்லாறு பழங்குடியினத்தை சேர்ந்த 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேர் மற்றும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்டோர் அடங்கிய வனத்துறையை சேர்ந்த குழுவினர் அவர்களுடன் பாதுகாப்பாக அழைத்து செல்வர். கல்லாறு வன சோதனைச்சாவடியில் துவங்கும் இந்த பயணம் துவங்குகிறது.

மேலும், வாகனங்கள் மூலமாக பர்லியாறு வரை சென்று அங்கிருந்து கல்லாறு வரை வனப்பகுதிக்கு இடையே மலையேற்றம் செல்லலாம். மலையேற்றம் செல்லும் பொழுது இதமான சூழல், பசுமை போர்த்தியது போல காணப்படும் வனப்பகுதிகள், ஜில்லென்ற நீர்வீழ்ச்சிகள், யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகளின் காலடித்தடங்கள், பல அரிய வகை பறவையினங்கள், ரீங்காரமிடும் பூச்சிகள், வண்டுகள், வனவிலங்குகளின் சப்தங்கள், வாய்ப்பு இருந்தால் வனவிலங்குகளையும் நேரில் கண்டு மகிழலாம். இந்த அனுபவம் ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக நிச்சயம் இருக்கும்.

மலையேற்றம் செல்லும்போது வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் அதற்கேற்ப வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மலையேற்றம் செல்லும்போதும், வரும்போதும் பயணிகளுக்கு தேவையான தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

மலையேற்றத்திற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையேற்ற பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்ததுடன், பல அரிய வகை பறவையினங்களையும், வனவிலங்குகளையும் கண்டு மகிழ்ந்தனர்’’ என்றார்.

The post கல்லாறு பர்லியாறு இடையே மலையேற்றத்திற்கு இளைஞர்கள் இளம்பெண்களிடையே ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kallar ,Parliyar ,Mettupalayam ,Mettupalayam forest ,
× RELATED திருவாரூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி கை துண்டானது