×

இந்த வார விசேஷங்கள்

திருப்பாணாழ்வார்
திருநட்சத்திரம்
14.12.2024 – சனி

இன்று ரோகிணி நட்சத்திரமாக இருப்பதால், திருப்பாணாழ்வார் அவதாரத் திருநாள் ஆகும். திருப்பாணாழ்வார் அவதார தினத்தை பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். குறிப்பாக, நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் இவருக்கு விசேஷமான உற்சவம் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் மிக விரிவாக இந்த உற்சவம் நடைபெறும். இன்றைய தினம் திருப்பாணாழ்வாரை நினைத்து வணங்குவதன் மூலமாக பெருமாள் பக்தி மனதில் விருத்தியாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

பாஞ்சராத்திர தீபம்
15.12.2024 – ஞாயிறு

இன்று பாஞ்சராத்ர தீபத் திருநாளாக கொண்டாடுவார்கள். மூன்று நாட்களும் தீபமேற்றினாலும் இன்றைய தினம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம வைணவக் கோயில்களுக்கு திருக் கார்த்திகை தீபத் திருநாள். பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். மூன்று உலகங்களையும் அளந்தபின், மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பினார். அப்போது மகாபலியின் யாகமும் தடைபட்டது. கார்த்திகை மாதம் பாஞ்சராத்திர தீபம் அன்று தீபங்கள் ஏற்றுவதன் மூலமாக மகாபலியின் யாகம் நிறைவேறும் அதன் பலன் எல்லோருக்கும் கிடைக்கும்.

திருப்பாவை
திருவெம்பாவை ஆரம்பம்
16.12.2024 – திங்கள்

அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால், இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும். ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும். மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு இறை நாமங்களை ஒரு முறை சொன்னால்கூட, மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம ஜபம் செய்ததற்கு சமம். மனிதர்களின் ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒரு தினமாகும். தட்சிணாயனமானது இரவாகவும் உத்தராயனமானது பகலாகவும் கணக்கிடப்படுகின்றது. மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற் காலையாகும். ஆதலால் நமது எல்லா தோஷங்களும் நீங்க அவசியம் இந்த மாதத்தில் தினமும் விடியற் காலையில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடி பூஜை செய்ய வேண்டும். விடியற்காலையில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜை செய்து வெண் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். என்று பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தேரி குடியிருப்பு கற்குவேல்
அய்யனார் கள்ளர் வெட்டு
16.12.2024 – திங்கள்

திருச்செந்தூர் தேரி குடியிருப்புகற்குவேல் அய்யனார் கோயில், கள்ளர் வெட்டு திருவிழா முக்கியமான திருவிழா. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூர்ணாதேவி அம்பாள்களுக்கும், கற்குவேல் அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும், இரவு வில்லிசை பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். கோயில் பின்புறம் உள்ள செமன்தெரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியைக் காண உள்ளூர் பக்தர்கள் என பல்லாயிர கணக்கானோர் வருவர். கோயில் வளாகத்தில் முன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், பின்னர் கள்ளர்வெட்டு நிகழ்ச்சியில் இருந்து மணலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த புனித மணலை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதுடன் விவசாயம், வியாபாரம், புதிய கட்டிடம் கட்டும்போது மற்றும் புதிய தொழில் தொடங்கும் போதும் பயன்படுத்துவர். உடல்நிலை குறைவு ஏற்பட்டாலும் இந்த மணலை எடுத்து உடலில் பூசி கொள்வது பக்தர்களின் நம்பிக்கை.

ரமணர் ஜெயந்தி
17.12.2024 – செவ்வாய்

மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு அவதரித்தவர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி. இவர் அவதரித்த, மார்கழி மாத பூனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாசிரமத்தில் ஜெயந்தி தின பாராயணம் நடைபெறும். பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளைப் பாடி பக்தர்கள் வழிபடுவர். ஸ்ரீரமணாசிரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். அன்னதானம் வழங்கப்படும்.

பரசுராமர் ஜெயந்தி
17.12.2024 – செவ்வாய்

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை. ஆனால், முதன்முதலாகபரசுராம அவதாரத்தில்தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றார். கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமர் தம்முடைய அவதார காலத்தின் முடிவில் கோடரியை கடலில் வீசினார். அதன் வேகத்திற்கு பயந்து மேற்குக் கடல் பின்வாங்கியது. அப்படி உருவான புண்ணியபூமிதான் கேரள பூமி என்பார்கள். அவரை நினைத்தால் பலமும் ஆயுளும் கூடும். பகை நீங்கும். வெற்றி கிடைக்கும்.

திருக்கோவிலூர்
ஞானானந்தகிரி ஆராதனை
17.12.2024 – செவ்வாய்

ஞானானந்தகிரி சுவாமிகள் ஓர் அத்வைத வேதாந்தி. கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் உள்ள பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி, இவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டார். சுப்பிரமணியனுக்கு 39 வயதான போது சிவரத்னகிரி அவருக்கு ஞானானந்தகிரி எனும் பெயரைச் சூட்டித் தனக்குப்பின் பீடாதிபதியாகும் பொறுப்பை அளித்தார்.பீடாதிபதி பொறுப்பேற்ற சில காலத்திலேயே ஞானானந்தகிரி வேறொருவரிடம் பீடாதிபதி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, இமயமலைக்குத் தவமியற்றச் சென்றுவிட்டார். கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடன்றி திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்றார். திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தினார். நாமசங்கீர்த்தனமே கலிகாலத்தில் இறைவனை அடைய எளிய வழி என்று நிரூபித்தவர் ஞானானந்தர். இன்றளவும் அவரது சீடர்கள் பஜனைக்கு (நாம சங்கீர்த்தனத்துக்கு) முக்கியத்துவமளிக்கின்றனர். அவர் ஆராதனை இன்று.

முதல் புதன் குசேலர் தினம்
18.12.2024 – புதன்

கிருஷ்ணரும் பலராமரும் சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலவாச முறையில் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அவர்களுடன் சுதாமர் (குசேலர்) என்னும் பாலகரும் பயின்றார். ஒரு நாள் கிருஷ்ணரும் பலராமரும் குருவின் வீட்டில் அடுப்பிற்கு விறகு கொண்டு வருவதற்காக காட்டிற்குச் சென்றார்கள். சற்று நேரத்தில் சுதாமரிடம் அவர்கள் மூவருக்கும் சாப்பிட சிற்றுண்டியாக கடலைப்பருப்பை வறுத்து சாந்தீபினி முனிவரின் மனைவி கொடுத்து அனுப்பினாள். சுதாமரும் அங்கே அவர்களை சந்தித்தார். தன்னிடம் மூவருக்கும் வறுத்த கடலைப்பருப்பு இருக்கும் விஷயத்தை சுதாமர் சொல்லவில்லை. கிருஷ்ணர் விறகு வெட்டியதில் களைப்புற்று சுதாமரின் மடியில் சற்றே ஓய்வாகப் படுத்துக் கொண்டார். அப்போது, அவர்களுக்குத் தெரியாமல் மூவருக்குமான வறுத்த கடலைப்பருப்பை தானே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணரிடம் உண்மையை மறைத்ததால் குசேலர் என்று அழைக்கப்பட்ட சுதாமர், தரித்திரத்தில் உழல வேண்டியதாயிற்று. அவருக்கு 27 குழந்தைகள். ஒரு நாள் மனைவி சுசீலை, ‘உங்கள் பால்ய நண்பர் தானே இப்போது துவாரகையில் அரசராக இருக்கிறார். நீங்கள் ஏன் அவரிடம் சென்று உதவி கேட்கக்கூடாதா என்கிறாள். எதாவது அவருக்கு சாப்பிட எடுத்துச் செல்ல வேண்டுமே! அவலை ஒரு சிறு முடிப்பாக தன் கிழிசல் அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு துவாரகைக்குப் போகிறார். அரண்மனை சேவகர்கள் அவரை தடுத்துவிட, கிருஷ்ணரே வாசலுக்கு ஓடி வந்து குசேலரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார். அன்போடு ராஜோபசாரம் செய்து, தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார வைத்து அவருக்குப் பாத பூஜை செய்கிறார். ருக்மணி அவருக்கு சாமரம் வீசுகிறாள். அங்கு அவருக்கு நடந்த விருந்து உபசாரத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் ‘‘எனக்கு என்ன கொண்டு வந்தாய்?’’ என்று கேட்க, குசேலர் தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணருக்கு மிகுந்த வெட்கத்துடன் சமர்ப்பிக்கிறார். அதை கிருஷ்ணர்ஆவலோடு உண்ட கணத்தில் குசேலரின் வறுமை முற்றிலுமாக நீங்கி, எல்லா செல்வங்களும் அவரிடம் சென்று சேர்ந்தன.மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை இந்தச் சந்திப்பு நடந்ததால், வருடா வருடம் மார்கழி மாத முதல் புதன்கிழமை ‘குசேலர் தினமாக’ குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. நம் வீடுகளில் குசேலர் கிருஷ்ணருக்கு அளித்தது போல அவலை வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பிரசாதமாகப் படைத்து வழிபட்டால், நமக்கும் பகவான் அருள் தேடி வரும். 

14.12.2024 – சனி – திருவாஞ்சியம் முருகன் வீதி உலா.
15.12.2024 – ஞாயிறு – பாம்பாட்டி சித்தர் (சங்கரன் கோவில்) குருபூஜை.
16.12.2024 – திங்கள் – ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவம் ஆரம்பம்.
16.12.2024 – திங்கள் – சடையனார் குருபூஜை.
16.12.2024 – திங்கள் – திருவள்ளூர் சுவாமி புறப்பாடு.
18.12.2024 – புதன் – சங்கடஹர சதுர்த்தி.
19.12.2024 – வியாழன் – அகஸ்தியர் குருபூஜை.
19.12.2024 – வியாழன் – சித்த மருத்துவ தினம்.
20.12.2024 – வெள்ளி – சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்க பாவாடை தரிசனம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Thirupanalwar Thirunatchathram ,Saturn ,Rokini ,Tirupanalwar ,Thirupanalwar Avars Day ,Umayyur Kamalavalli Nachiyar Temple ,Nachiyar Temple ,
× RELATED இந்த வார விசேஷங்கள்