இதற்காக அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், உபரிநீர் கூடுதலாக திறக்க முடிவு செய்த அதிகாரிகள், மூன்று மதகுகள் வழியாக 4500 கன அடி உபரி நீரை வெளியேற்றினர். மேலும், பொதுமக்கள் யாரும் உள்ளே வராத வகையில் ஏரிக்கு செல்லும் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணித்து, ஏரிக்கு வரும் நீரை அப்படியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றி வந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் நேற்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் வந்து திடீர் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும் நீர் வெளியே செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தவித அச்சமும், பயமும் பட தேவையில்லை.
மழைக்காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரை முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் இன்று ஆய்வுக்கு செல்வேன். அனைத்து இடங்களிலும் முகாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பதற்றமோ, பீதியோ அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அடையாறு ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அன்றைய தினத்தில் உபரிநீர் திறக்காமல் நேற்று உபரிநீர் திறந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2015ம் ஆண்டு அதிக அளவில் நீர் தேக்கி வைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு தற்போதுதான் ஏரியில் இந்த அளவு அதிக அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post முழு கொள்ளளவை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.