×

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது வடகடலோர மாவட்டங்களில் 17, 18ம் தேதிகளில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 48 மணி நேத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் 17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த நகர்வுகளை பொறுத்தே சென்னையில் மழை அளவை கணிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது தொடர்ந்து படிப்படியாக மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.  பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. 29 இடங்களில் அதிகனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டி மீட்டர் பெய்துள்ளது. ரெட் அலர்ட் கொடுத்திருந்த 3 மாவட்டங்களிலும் அதிகனமழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில், மத்திய மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களின் கனமுதல் மிக கனமழைக்கும், நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும், ஏனைய தென்தமிழக உள்மாவட்டங்களில் ஓாிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனை தொடர்ந்து வருகிற 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17, 18 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த நகர்வுகளை பொறுத்தே சென்னையில் மழை அளவை கணிக்க முடியும். இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று(நேற்று) வரையிலான காலகட்டத்தில் 54 சென்டி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இயல்பு அளவு 40 சென்டி மீட்டர். 32 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்தவரையில் 5 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 13 மாவட்டங்களில் இயல்பை ஓட்டியும் மழை பதிவாகியுள்ளது. நேற்று(நேற்று முன்தினம்) பார்த்தீர்கள் என்றால் இயல்பை 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இன்று(நேற்று) ஒரே நாளில் இயல்பை விட 32 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. கிட்டத்தட்ட 16 சதவீதம் பரவலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது வடகடலோர மாவட்டங்களில் 17, 18ம் தேதிகளில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்...