ஊட்டி : குன்னூர் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10ம் தேதி மனித உரிமைகள் தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மனித உரிமைகளும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் முதல்வர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை அடிப்படை மனித உரிமைகளுக்கான வரையறை ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி வாழ்வுரிமை, நல்ல உணவு, தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர், சுகாதாரம், கருத்து சுதந்திரம் போன்ற பல உரிமைகள் பேசப்படுகின்றன.
மனித உரிமைகளும் சுற்றுச்சூழல் உரிமைகளும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. நல்ல உணவு ஒருவரின் அடிப்படை உரிமையாகும். மக்களுக்கு உணவு கிடைக்கிறது. ஆனால் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் உணவை பழங்குடி மக்கள் கூட மறந்து விட்டார்கள். எளிதில் கிடைக்கும் அரிசி தான் இப்பொழுது உணவாக கிடைக்கிறது.
நெல் விளையும் வயல்களில் இருந்து தான் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு 20 சதவீதம் உற்பத்தியாகிறது. நமது உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலையும் காலநிலை மாற்றத்தையும் நம்மால் மாற்ற முடியும். தூய காற்று உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை. இன்று காற்று மாசு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளி குழந்தைகளில் 30 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயாளிகள் என அண்மையில் வெளியான செய்தி கூறுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டெல்லிக்கு வருவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. நமது நீலகிரி மாவட்டத்தில் கூட கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஒரு ஆய்வின்படி உதகையில் காற்று மாசின் அளவு 465 பிபிஎம் என கண்டறியப்பட்டது. அதிகபட்சம் 350 பிபிஎம்க்கு மேல் இருந்தால் அந்தக் காற்று சுவாசிப்பதற்கு தகுதி இல்லாதது என அறிவியல் கூறுகிறது. சுத்தமான குடிநீர் ஒரு அடிப்படை உரிமை. இந்தியாவில் உள்ள 70 சதவீதம் மக்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. பூமியில் உள்ள நன்னீரில் என்பது சதவீதம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவு உற்பத்தி பெருமளவில் குறையும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காலநிலை மாற்றம் பறவைகள் பூச்சிகள் போன்றவற்றையும் பாதிப்பதால் தாவரங்களும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறையும். வரைமுறையற்ற ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால் மண் வளமிழந்து மலட்டு மண்ணாகி வருகிறது.
ஹரியானா, ஆந்திரம் போன்ற பகுதிகளில் உள்ள வயல்களில் உணவு உற்பத்தி திறன் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. மனித வாழ்விற்கான அடிப்படை உரிமை சுற்றுச்சூழலின் சுகாதாரத்தை சார்ந்துள்ளது என்பதுதான் உண்மை. மலைகள் தான் தண்ணீர் மற்றும் பல்லுயிர் சூழல்களுக்கு ஆதாரம். மலைகளில் இயற்கையாக அமைந்துள்ள நீரூற்றுகள் மற்றும் தண்ணீர் வழித்தடம்தான் சமவெளி பகுதிக்கு நீர் ஆதாரம். ஒரு மலையின் ஒவ்வொரு உயரத்திற்கும் ஏற்ப பல வகையான தாவர இனங்கள் இருக்கும்.
மலை அடிவாரம் தான் ஒட்டுமொத்த மலையின் எடையை தாங்கும். மலைப்பகுதியில் உள்ள பாறைகள் மண்ணை பிடிமானமாக வைத்திருக்கும். மலைகளின் நலம் தான் சமவெளி பகுதிகளின் வளம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் தொழிற்பயிற்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, பயிற்சி அலுவலர் ஜோகி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
The post மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பதில்லை appeared first on Dinakaran.