சொல்லழகு: அருந்தமிழ் மொழியில் பல பொருள் குறித்த ஒரு சொல்லும் ஒரு பொருள் குறித்த பல சொற்களும் உள்ளன. அவ்வகையில் அண்ணாமலை என்பது ஒரு சொல்தான். ஆனால் அச்சொல்லானது பல பொருளைக் குறிக்கிறது. அண்ணாமலை என்ற சொல் ஊரையும் குறிக்கும். ஊரின் நடுவே ஓங்கி வளர்ந்திருக்கும் மலையையும் குறிக்கும். அங்கே அருள்பாலிக்கும் இறைவனையும் குறிக்கும். ஏகன் அநேகன் என்ற தத்துவத்தை பெயரிலேயே குறிக்கும் பெருமைமிக்கது திருவண்ணாமலை.
சொல்லும் சோணகிரியும்:-
சொல்லுக்கும் சோணகிரிக்கும் (அண்ணாமலை) பல சம்பந்தங்கள் உள்ளன. அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் வரும் ‘‘கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை’’ என்ற சொற்கள்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த வள்ளலாரின் ‘‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’’ என்ற மகாமந்திரத்திற்குத் தாய் மடியாக அமைந்தது என்பர் பெரியோர்.
சொலவடையும் சோணகிரியும்:-
ஊர்ப்புறத்திலே இந்த அண்ணாமலையை வைத்து ‘‘ஏமாந்த சோணகிரி’’ என்ற ஒரு சொலவடையைப் பயன்படுத்துவர். அதன் உண்மையான வடிவம் ‘‘ஏமாற்றிய சோணகிரி’’ என்பதாகும். சோணகிரி என்றால் அண்ணாமலை. அடியையும் முடியையும் தேடிய பிரம்மாவையும் திருமாலையும் அவற்றைக் காண விடாமல் ஏமாற்றியது இந்தத் திருவண்ணாமலை. அதன் அடிப்படையில்தான் ‘‘ஏமாற்றிய சோணகிரி’’ என்ற வழக்கு வந்தது. அது காலப்போக்கில் ‘‘ஏமாந்த சோணகிரி’’ என்றானது.
ஆளுடையபிள்ளையும் அண்ணாமலையும்:-
தன்னுடைய பெயருக்கு முன் ‘‘தமிழ்’’ என்று சேர்த்துக்கொண்டு தவத்தமிழ் பாடியவர் ஆளுடைய பிள்ளை எனும் திருஞானசம்பந்தர். இவர்தம் அருந்தமிழைக் கேட்பதற்கு, அண்ணாமலையாரே ஒரு சிறுவன் வடிவில் சென்று சம்பந்தருக்கு வழிகாட்டினார் என்பது வரலாறு.
‘‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே’’ என்று இந்த அண்ணாமலையை தொழுபவர்களின் வினை முழுதும் அறுபடும் என்று அருந்தமிழ்பாடி அண்ணாமலையின் அற்புதத்தை இன்னும் ஒருபடி உயர்த்தியவர் சம்பந்தர்.
‘‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே’’
– என்று தமிழெடுத்துப் பாடிய சம்பந்தர், பாடலின் தொடக்கத்திலேயே ‘‘உண்ணாமுலை’’ என்று அம்பிகையின் பெயரையும் குறித்துப் பாடியது குறிப்பிடத்தக்கது.
திருமுறையும் திருவண்ணாமலையும்:-
நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தர், நாவேந்தராகிய அப்பர், மாணிக்கவாசகர் ஆகிய மூன்று அடியார் பெருமக்கள் இத்தலத்தில் பாடியுள்ளனர்.
‘‘பூவார் மலர்கொண்டு’’ என்று திருஞானசம்பந்தரும், ‘‘ஓதிமா மலர்கள் தூவி’’ என்று தொடங்கி மொத்தம் மூன்று பதிகங்களைத் திருநாவுக்கரசரும் இயற்றி மகிழ, மார்கழி மாதத்தில் பாடப்பெறும் திருவெம்பாவையையும், திருவம்மானையையும் மாணிக்கவாசகர் இத்தலத்தில்தான் பாடியருளியுள்ளார்.
அவ்வகையில், ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை,’’ ‘‘மாலறியா நான்முகனும் காணா மலை,’’ ‘‘பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே,’’ ‘‘அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை,’’ ‘‘போற்றி மால் நான்முகனும் காணாதி புண்டரீகம்” என்றெல்லாம் திருவெம்பாவையிலே அண்ணாமலையார் குறித்து வாதவூர் அடிகளார் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இவர் இத்தலத்திலிருந்துதான் இந்தத் திருவெம்பாவையைப் பாடினார் என்பதற்குச் சான்றாக கிரிவலப் பாதையிலே மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய இடம் எனக் குறிப்பிட்டு ஒரு கோயில் காணப்படுகிறது.
இந்தத் திருவெம்பாவைதான் திருக்கோவையார் என்ற சைவ அகநூல் எழுவதற்குக் காரணமாகும். திருவெம்பாவையில் மகிழ்ந்த சிவபெருமான் திருவாய் மலர்ந்து நம் மாணிக்கவாசகரிடம் ‘‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’’ என்று கேட்க, அதனால் எழுந்ததே திருக்கோவையார்.
இவ்வாறு திருவெம்பாவையும் அதிலிருந்து திருக்கோவையாரும் எழுவதற்கு நம் அண்ணாமலை தான் காரணம் எனலாம்.
மேலும் திருஅம்மானையில் ‘‘அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய்’’ என்றும், போற்றித் திருஅகவலிலே ‘‘அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி’’ என்றும் சிறப்பித்துப் பாடினார் மாணிக்கவாசகர்.
திருப்புகழும் திருவண்ணாமலையும்:-
சந்தத் தமிழால் கந்தப் பெருமானைத் தமிழுக்குச் சொந்தமாக்கித் தந்தவர் அருணகிரிநாதர். இவர் இந்த அண்ணாமலையிலேயே பிறந்தவர் என்பதற்குச் சான்று அவர் பெயர்தான். ‘‘அருணகிரி’’ என்பது திருவண்ணாமலையின் இன்னொரு பெயர்.
அவ்வண்ணம், இங்கு உதித்த அருணகிரிநாதருக்கு முருகனே குருவாக எழுந்தருளி அவரது நாவில் ஞானவேலின் முனையால் ஓம் என்று எழுதி ஞான வித்யாரம்பம் செய்து வைத்து, ‘‘முத்து’’ என்று அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் முதலில் பாடியதே ‘‘முத்தைத்தரு பத்தித்திருநகை’’ என்று தொடங்கும் அற்புதத் திருப்புகழ்ப் பாடல்.
இது மட்டுமின்றி வேறு திருப்புகழ்ப் பாடல்களிலும் இத்தலத்தை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
‘‘அருணை வெற்பில் உறைவோனே’’ என்றும், ‘‘கருணை அடிய ரொடு அருணையில் ஒருவிசை சுருதி புடைதர வரும் இருபரிபுர கமல மலரடி கனவிலும் நனவிலும் மறவேனே’’
என்றும்,
‘‘சிறுவவனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழுநிலை திகழ்வன சிகரி மிசையொரு கலபியில் உலவிய பெருமாளே’’
என்றும்,
‘‘கருணை வருணித தனுபர குருபர அருணை நகருறை சரவண குரவணி புயவேளே’’
என்றும்,
‘‘முடுகு கயலுகள் வயல்களும் முருகவிழ் தடமும் முளரிய அகழிய மதில்களும் முழுதும் உடையதொரு அருணையில் உறைதரும் இளையோனே’’
என்றும்,
‘‘பரவை படியினும் வசமழியினும் முதல் அருணை நகர்மிசை கருணையொடு அருளிய பரம வொரு வசனமும் இரு சரணமும் மறவேனே’’
என்றும்,
‘‘அருணை நகர்மிசை கருணையொடருளிய மவுன வசனமும் இருபெரு சரணமும் மறவேனே’’
என்றும்,
‘‘அருணையில் அறம்வளர் கருணையுமைதரு சரவண சுரபதி பெருமாளே’’
என்றும்,
‘‘அழகு சரண்மயில் புறமதருளியொ ரருண கிரிகுற மகளை மருவிய பெருமாளே’’
என்றும்,
இன்னும் பற்பல பாடல்களில் அருணகிரிநாதர் அண்ணாமலையைப் பற்றியும் தனக்கு முருகன் அருளிய திறத்தையும் தலத்தின் சிறப்பையும் எழுத்துரைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, இத்தலத்தில் விண்ணுயர் கோபுரங்களைப் பாடும்போது,
‘‘திருஉலாவு சோணேசர் அண்ணாமலை
முகில் உலாவு விமான நவோநிலை
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே’’
என்ற வரிகளில் இங்குள்ள கோபுரங்களுடன் மேகக் கூட்டங்கள் கொஞ்சி விளையாடுகின்றன என்று குறிப்பிடுகிறார்.
மேலும், தெய்வத் தமிழால் தெய்வங்களை வரவழைக்க முடியும் என்று நிறுவியவர் அருணகிரி நாதர். அவ்வகையில், முருகனையும் அம்பிகையையும் அழைக்க, ‘‘அதல சேடனாராட அகிலமேரு மீதடா’’ என்ற பாடலை இந்த அண்ணாமலையில்தான் பாடி வரவழைத்தார்.
மேலும் கம்பத்திலிருந்து இளையனாகிய கந்தப் பெருமானை வரவழைக்க, ‘‘செங்கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்’’ என்ற பாடலைப் பாடியதும் பிரகலாதனுக்காக பெருமாள் தூணிலிருந்து
தோன்றியதைப் போன்று அருணகிரியில் அருணகிரிக்காக அழகன் முருகன் தோன்றினார் என்பது வரலாறு.
ஒவ்வொரு தலத்திலும் முருகப் பெருமான் அருணகிரி நாதருக்கு ஒவ்வொரு விதமாகக் காட்சி தந்திருந்தாலும் இந்த அண்ணாமலையில்தான் ஆறுமுகத்துடன் அருள் செய்தார். இதை,
‘‘ஏறுமயில் ஏறி விளையாடு முகமொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றே
குன்று உருவ வேல்வாங்கி நின்றமுகமொன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணம் புணர வந்தமுகமொன்றே
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’’
– என்று பாடியருளினார்.
மேலும், அருணகிரிநாதர் அழியா அழகனாகிய முருகனுக்கு அழியாத அழகுத் தமிழால் செய்ததுதான் கந்தர் அலங்காரம். அந்த அலங்காரத்தின் முதல் பாடலிலேயே காப்பாகி நம்மை விரல் பிடித்து அருணைக்கு அழைத்துச் சென்று விளக்குவதைப் போல் அங்குள்ள மூத்த பிள்ளையாரையும் இளைய பிள்ளையாரையும் அறிமுகம் செய்வதாக,
‘‘அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டுகொண்டேன்-வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே’’
– என்று பாடியிருக்கிறார்.
விவேக சிந்தாமணியும் விநோத அண்ணாமலையும்:-
தமிழில் தோன்றிய நீதி இலக்கியங்களில் இன்னும் புழக்கத்தில் அதிகமாக இல்லாத அற்புத இலக்கியம் விவேக சிந்தாமணி.
இதன் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருவண்ணாமலை கணபதிதான் போற்றப்படுகிறார்.
‘‘அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரம் போம்- நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேலும்
கணபதியைக் கைதொழுதக் கால்’’
– என்ற பாடலே அது.
மலையும் மாலையும்:-
கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்பட்ட துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அண்ணாமலையை வலம் வந்துகொண்டே அண்ணாமலையின் சிறப்பை 200 பாடல்களில் ‘‘சோண சைலமாலை’’ என்ற பெயரில் பாடியருளினார். ‘இதுபோன்று மகாவித்வானால் பாடமுடியுமா?’ என்று கேட்க மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் திருத்துவத்துறையில் அம்பிகையை வலம் வருவதற்குள் ஓர் அருள் நூல் பாடினார் என்பது வரலாறு.
அழியும் மலையா? அழியா மலையா?
‘‘ஞானத் தபோதனரை வா என்று அழைக்கும்’’ இந்த அண்ணாமலையில் குகை நமச்சிவாயர் என்ற ஞானி வாழ்ந்தார். இந்த ஞானியிடம் இந்த ஊர்க்காரர் சிலர் விளையாடினர். ஓர் இளைஞனை படுக்க வைத்துவிட்டு, இவன் இறந்து விட்டான். இவனை எழுப்புங்கள் என்கிறார்கள். ஞானி ‘‘இறந்தவன் இறந்தவனாகவே இருக்கட்டும்’’ என்றார். அவன் உடனே இறந்துவிட, ஞானியின் மீது அனைவரும் குறை சொன்னார்கள்.
உடனே, ‘குறும்பர்கள் வாழும் ஊர்; அடுத்தவரைக் கொன்றால் கூட ஏனென்று கேட்காத ஊர்; கொடும் காளை மாடுகள் கதறும் ஊர்; பழிகளைச் சுமக்கும் ஊர்; பாவிகள் வாழும் ஊர்’’ என்று பாடி இறுதியில் ‘‘அழியும் ஊர்’’ என்று பாடப் போனார். உடனே அண்ணாமலை ஈசன் ‘‘நான் இங்குதான் வாழ்கிறேன்’’ என்று குரல் கொடுக்க, ‘‘அழியா ஊர்’’ என்று பாடினார் என்பது வரலாறு.
அப்பாடல்:-
கோளர் இருக்குமூர்; கொன்றாலும் கேளாவூர்,
காளையே நின்று கதறும் ஊர் – நாளும் பழியே
சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
அழியும் அழியாவூர் அண்ணாமலை’’
பிற இலக்கியங்கள்:-
இவ்வூரில் வாழ்ந்த ஞானிகள் பலர் இவ்வூரைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். அதில் ரமண மகரிஷி அக்ஷரமணமாலை என்கின்ற அற்புத நூலை அருளினார். ‘‘அருணாசலா’’ என்ற மந்திரத்துடன் அமைந்த அற்புதத் தோத்திர நூல் அது.
அதே போன்று தாண்டவராய சுவாமிகள், வேதத்தின் திரண்ட பொருளை ‘‘கைவல்ய நவநீதம்’ என்ற பெயரில் இத்தலத்தில்தான் அருளினார்.
மேலும்,
‘‘கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை; கார்த்திகையை மிஞ்சிய திருவிழாவுமில்லை’’
‘‘அண்ணாமலையாரின் அருள் உண்டானால் மன்னார் சாமியைக் கேட்பானேன்’’
‘‘பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளிபோட்டு கடைந்தால் உண்ணாமுலைத்தாய் கூட ஓடி வந்து கேட்பாள்’’
‘‘ஆழம் தெரியாமல் காலை விட்டேன் அண்ணாமலையப்பா, ’’
– போன்றவை அதிகமாக வழக்கிலுள்ள அண்ணாமலை குறித்த பழமொழிகள் ஆகும்.
தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்
The post அருந்தமிழ் கமழும் அண்ணாமலை appeared first on Dinakaran.