×

பாம்பன் ஜெட்டி பாலத்தின் அடியில் மணல் குவியலால் மீனவர்கள் அவதி

 

ராமேஸ்வரம், டிச.13: பாம்பன் தெற்குவாடி ஜெட்டி பாலத்தின் அடியில் ஏற்படும் மணல் குவியலால், மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். படகுகளை நிறுத்தம் வகையில் சரி செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 90க்கும் அதிகமான விசைப்படகுகளும், நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. விசைப்படகு மீனவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் அனைத்தும் கூடைகளில் நிரப்பி சிறிய நாட்டுப்படகு மூலம் இறங்கு தளத்திற்கு கொண்டு வந்து இறக்கப்படுகிறது. படகுகள் கரைக்கு வரும் நாட்களில் டன் கணக்கில் மீன்கள் இறக்கப்படும். இந்நிலையில் தெற்குவாடி ஜெட்டி பாலத்தின் அடியில் கடல் உள்ளே உள்ள மணல் அலைகளில் கரைக்கு அடித்து அதிகளவில் குவிந்து வருகிறது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் மீன்களை இறங்கு தளத்தில் இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறிய நாட்டுப்படகுகள் கூட இறங்கு தளத்தில் ஒட்டி நிறுத்தி முடியாமல் 30 அடி தூரம் தள்ளி கடலுக்குள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் கூடைகள், மீன்பிடி உபகரணங்களை சுமந்து இறக்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மீன் இறங்கு தளத்தில் குவியும் மணல்களை சரி செய்து படகுகளை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாம்பன் ஜெட்டி பாலத்தின் அடியில் மணல் குவியலால் மீனவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Pamban Jetty Bridge ,Rameswaram ,Pamban South Wadi Jetty Bridge ,Pamban ,Rameswaram… ,
× RELATED மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை