மதுரை, டிச. 13: மதுரை மாநகர் வடக்கு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், செல்லூர் கால்வாய் திட்டத்திற்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென சட்டசபையில் தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் மானிய கோரிக்கையின் போது. மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் கன மழை பெய்தது.
அந்த மழையினால் மதுரை வடக்கு பகுதியில் அமைந்துள்ள செல்லூர் கண்மாயில் தண்ணீர் பெருகி செல்லூர் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். அதனை தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரூ.15 கோடி நிதி ஒதுக்கி செல்லூர் கால்வாயை மேம்படுத்த உத்தரவிட்டார். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு, தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோன்று இந்தத பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், செல்லூர் கால்வாயை சீரமைக்க ரூ.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வளத்துறை சார்பாக திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
The post மதுரை மாநகரில் செல்லூர் கால்வாய் திட்டத்திற்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: சட்டசபையில் கோ.தளபதி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.