திண்டிவனம், டிச. 13: திண்டிவனம் வீராங்குளம் ஏரியில் மணல் தடுப்புகளை மர்ம நபர் உடைத்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு சார் ஆட்சியருடன் வாக்குவாதம் செய்தனர். பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் மற்றும் பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழைநின்று தண்ணீர் வடிய தொடங்கியது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வகாப் நகர், இந்திரா நகர், காந்தி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தற்போது காவேரிப்பாக்கத்தில் இருந்து தண்ணீரானது வீராங்குளம் ஏரியில் வந்து அங்கிருந்து கருணாவுர் வழியாக கடலுக்கு செல்லும். இதனிடையே வீராங்குளம் ஏரி பகுதியில் இருந்து நீர் நகருக்குள் வராமல் தடுக்கும் விதமாக நகராட்சி சார்பில் அப்பகுதியில் மணல்மேடுகள் குவித்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மர்ம நபர் அந்த மணல் மேடுகளை உடைத்துள்ளார். இதனால் அதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் திண்டிவனம் வாகாப் நகர், காந்தி நகர், தனபால் நகர், தட்சிணாமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு அதிகாரிகள் தங்கள் பகுதியை வந்து பார்வையிட வேண்டுமெனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படவே சம்பவ இடத்தை திண்டிவனம் சார் ஆட்சியர் திவயான்ஷு நிகம் பார்வையிட வந்தார். அவரை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முழங்கால் அளவு தேங்கிநின்ற வெள்ளத்தில் அதிகாரிகள் இறங்கிச் சென்று பாதிப்புகளை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் சார் ஆட்சியர் திவயான்ஷு நிகம், டிஎஸ்பி பிரகாஷ், வட்டாட்சியர் சிவா, நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் குமரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஊர்மக்கள் கலைந்து சென்றனர். இந்த வெள்ள நீரானது புதுச்சேரி, மரக்காணம் சாலைகளில் ஓடுவதால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திண்டிவனம் வீராங்குளம் ஏரியில் மணல் தடுப்புகளை உடைத்த மர்ம நபர் appeared first on Dinakaran.