புதுடெல்லி: மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை நேற்று முன்தினம் தந்துள்ளன. இந்நிலையில், மாநிலங்களவை நேற்று கூடியதும் அவைத் தலைவருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சர் ரிஜிஜூ கூறினார். இந்த அமளியால் அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘‘காங்கிரஸ் தலைமைக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் இடையே தொடர்பிருக்கும் விஷயத்தை விவாதிக்க நாங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தை திசை திருப்ப அவைத்தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொடுத்துள்ளன. இத்தகைய நோட்டீஸ் கண்டிக்கத்தக்கது. அவர்கள் அவைத்தலைவரை மதிக்கவில்லை’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அதானி லஞ்ச விவகாரம் குறித்து மட்டும் விவாதம் நடத்த அனுமதிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை ஒத்திவைப்பு: மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முழுமையாக நடைபெற்றது. பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பிய போது, பதிலுக்கு ஆளும் தரப்பில் சோரஸ்-காங்கிரஸ் தொடர்பு விவகாரத்தை கிளப்பின. இதனால் அமளி ஏற்பட்டு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், பேரிடர் மேலாண்மை சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசிய போது, அவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து கல்யாண் பானர்ஜி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம்பிர்லா நீக்கினார். இதைத் தொடர்ந்து ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக அவை கூடியதும், கல்யாண் பானர்ஜி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார். அதை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஏற்க மறுத்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* ரயில்வே மசோதா நிறைவேறியது
மக்களவையில் ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு நேற்று பதிலளித்த பேசிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘‘சில உறுப்பினர்கள் இந்த மசோதா ரயில்வேயை தனியார்மயமாக்கும் என பொய்யான கதை கட்டினர். அவர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். ஏற்கனவே அவர்களின் அரசியலமைப்பு கதை தோல்வி அடைந்தது. அதே போல இதுவும் தோல்வி அடையும்’’ என்றார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
* பாஜ, காங். மீது திரிணாமுல் புகார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி நாடாளுமன்றத்தின் வெளியே நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாஜ, காங்கிரஸ் கட்சிகள் விருப்பப்படிதான் நாடாளுமன்றம் நடக்கிறது. அவர்கள் விரும்பினால் அவை நடக்கும், இல்லாவிட்டால் முடக்கிவிடுவார்கள். பாஜ நினைத்தால் உடனே நிஷிகாந்த் துபே ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்புவார். அமளி நடக்கும், அவை முடங்கும். அதே போல தான் காங்கிரசும். இதனால் மற்றவர்களின் எந்த அலுவலும் நடக்காது. பிற கட்சிகளுக்கு எந்த வேலையும் இல்லை’’ என்றார்.
The post நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசால் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்: மாநிலங்களவை முடங்கியது appeared first on Dinakaran.