அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மனித மூளையின் பாதி பகுதியைத்தான் இதுவரை படமாக எடுத்து வெளியிட்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை என்பது 150 முதல் 200 மில்லியன் (அதாவது ரூ.1,500 கோடிக்கு மேல்) டாலர் ஆகும். ஆனால், சென்னை ஐ.ஐ.டி., ஒன்றிய அரசு, முன்னாள் மாணவர், தன் சொந்த நிதி ஆகியவற்றில் இருந்து ரூ.115 கோடியை செலவு செய்து மனித மூளையின் முழு பகுதிகளை படமாக எடுத்து, அதில் 5,132 மூளைப் பிரிவுகளை உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இருக்கிறது.
மனித மூளை தொடர்பான 3டி படங்களை https://brainportal.humanbrain.in/publicview/index.html என்ற இணையதளத்தில் அனைவரும் சென்று தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் வெளியிட்டுள்ளது. கருவில் 14வது வாரம் முதல் 24வது வாரம் வரையில், அதாவது 14, 17, 21, 22 மற்றும் 24வது வார இறந்த குழந்தைகளின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனை 0.5 மைக்ரான் அளவுக்கு வெட்டி எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் 3டி வடிவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2022 மார்ச் மாதம் தொடங்கிய இந்த பயணத்தை தற்போது வெற்றிகரமாக சென்னை ஐ.ஐ.டி. முடித்துள்ளது. ஆனாலும் இது ஆரம்பம் என்றே சொல்லப்படுகிறது. கூகுள் மேப்பில் எவ்வாறு இடங்களை நுட்பமாக தேடி பார்க்கிறோமோ? அதேபோல், இந்த 3டி தொழில்நுட்ப படங்கள் வாயிலாக மனித மூளையை நுட்பமாகவும், தெளிவாகவும் பார்க்க முடியும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமை தாங்கினார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் மோகனசங்கர் சிவபிரகாசம், இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் குமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது: மூளை எப்படி வளருகிறது, அதற்கு என்னென்ன பிரச்னை வருகிறது, மூளையை நோய்கள் எப்படி பாதிக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சிகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்தியா நினைத்தால் எந்த ஆராய்ச்சியையும் செய்ய முடியும் என்பது சென்னை ஐ.ஐ.டி.யின் இந்த ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. குழந்தைகளுக்கு மூளை பிரச்னை வராமல் தடுப்பதற்கு இது பெரிய உதவிகரமாக நிச்சயம் இருக்கும். ‘எந்திரன்’ திரைப்படத்தில் உணர்ச்சி கொண்ட ரோபோ மனிதனாக சித்தரித்து காட்டப்பட்டது உண்மையாக மாறுவதற்கும் இந்த ஆய்வு பயன்படும். இந்த முயற்சிக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post உலகிலேயே முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் மனித மூளையை ஆவணப்படுத்தியது சென்னை ஐஐடி: நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை appeared first on Dinakaran.