பெரம்பூர்-வில்லிவாக்கம் இடையே 4வது ரயில் முனையம் அமைக்க திமுக எம்பி கிரிராஜன் வலியுறுத்தல்

சென்னை: டெல்லியில் உள்ள ரயில் பவனில் ஒன்றிய அரசின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மாநிலங்களவை திமுக உறுப்பினர் இரா.கிரிராஜன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவில், சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப ரயில் போக்குவரத்து அவசியமாக உள்ளது. மருத்துவம், வியாபாரம், கல்வி, வணிகம், வழிபாட்டு தலம், சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக சென்னையை நோக்கி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். நாட்டின் அனைத்து பகுதிகளிருந்தும் ரயில்கள் இயக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் முனையங்கள் போதுமானதாக இல்லை. இதனால் 3வது ரயில் முனையமாக செயல்படுத்தப்பட உள்ள தாம்பரம் புறநகர் பகுதியில் உள்ளதால், சென்னையின் மைய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்கவேண்டிய அவசியம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ரயில் பயணத்தை எளிதாக மேற்கொள்ள வசதியாக ரயில்வே துறைக்கு சொந்தமாக பெரம்பூர், வில்லிவாக்கம் இடையே காலியாக உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 4வது ரயில் முனையத்தை அமைக்கலாம். இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வரும் 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post பெரம்பூர்-வில்லிவாக்கம் இடையே 4வது ரயில் முனையம் அமைக்க திமுக எம்பி கிரிராஜன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: