டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு

டெல்லி: டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியறுத்தியுள்ளார். டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி.; டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி தந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, கலாச்சார, பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் முன் மாநில அரசிடம் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய இடம் என்பதால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது. இந்த திட்டம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வரும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆகவே டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து பேசிய மாணிக்கம் தாக்கூர்; இறை நம்பிக்கை உள்ள இடங்களை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேதாந்தாவா? கடவுளா? என்றால் பா.ஜ.க. அரசு வேதாந்தாவுடன் செல்ல தயாராக உள்ளது என்றும் தாக்கூர் விமர்சனம் செய்தார்.

இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு; தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று கூறினார்.

The post டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: