புதுச்சேரி : புதுச்சேரியின் சாலைகள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருக்கும். சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்நிலையில் கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழையால் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், மழைவெள்ளத்தால் சாலைகளில் உள்ள சிறுஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையோரம் பரந்து கிடக்கிறது. காமராஜர் சாலை, கடலூர் சாலை, திண்டிவனம் சாலை, இசிஆர் உள்ளிட்ட முக்கிய சாலைகளும் இதில் அடங்கும்.
வெள்ளத்தால் வீணான பொருட்கள் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன
புயல் கனமழையால் ரெயின்போநகர், கிருஷ்ணாநகர், கோவிந்தசாலை மற்றும் அதனை ஒட்டிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் மின்சாதன பொருட்கள், புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வெள்ளநீரில் நனைந்து வீணான பொருட்களை தங்களது வீடுகளுக்கு முன்பு ஓரமாகவும், அங்குள்ள குப்பை தொட்டிகளிலும் மக்கள் குவித்து போட்டுள்ளனர்.
தெருவில் குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களில் பலர், அதனை எடுத்துச் செல்வதில்லை. இதனால் 10 நாட்களாக அவை அங்கேயே கிடக்கிறது. எனவே, சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டு, அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளில் குவிந்து கிடக்கும் வேஸ்ட் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புயல் மழையால் சாலையோரத்தில் பரந்து கிடக்கும் சிறுஜல்லி கற்கள் appeared first on Dinakaran.