ஊட்டி : குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார்.
மேலும், 14 வகையான மளிகை தொகுப்புகள் ரேசன் கடை மூலம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற ஆணை பிறப்பிக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டது.
இதுதவிர மக்களை தேடி மருத்தவ திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், பள்ளி மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்காக ரூ.1000 வழங்கும் திட்டம், குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை களைய இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000ம் வழங்கும் திட்டம் போன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த பொதுமக்களுக்கு சென்றடையும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் சிறப்பு புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட வண்டிச்சோலை பகுதியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. இந்த புகைப்பட கண்காட்சியின் போது அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
The post குன்னூர் வண்டிச்சோலையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.