திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருவண்ணாமலையில் கடந்த 1ம் தேதி பெய்த் கனமழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் புதையுண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருவிழாவான கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய விழாவாக மகாதீபம் மற்றும் பரணி தீபம் கருதப்படுகிறது. வரும் டிச.13ம் தேதி அதிகாலை கோவிலின் கருவறை முன்பு 4 மணியளவில் பரணி தீபமும் அதனை தொடர்ந்து மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி தீப மலையில் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

ஒவ்வொரு மகா தீபத்திற்கு பக்தர்கள் கடந்த 2 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2500 பேர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மலையேறி மகா தீபத்தை தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டதையடுத்து தீப மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் கடந்த 8ம் தேதி மலை மீது ஏறி ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து தீபம் ஏற்றப்படும் இடத்திலிருந்து 500மீ தொலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை எடுத்து செல்லும் வழியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீப திருவிழா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பரணி தீபத்திற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

The post திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: