பின்னர் தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளர் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2022-23ல் ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டை விட வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பே இதற்கு காரணம். அதேபோல் மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை 2018-19 நிதியாண்டில் ரூ.47,335 கோடியாக இருந்தது.
இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதம்.. இது 2022-23ல் ரூ.81,886 கோடியாக (மாநில ஜிடிபியில் 3.46%) அதிகரித்துள்ளது. இதுபோல் மாநில ஜிடிபியில் கடந்தாண்டை விட 14 சதவீதம் அதிகரித்தள்ளது. இதற்கு தொழில் மற்றும் சேவைகள் துறைகளின் பங்களிப்பு முக்கிய காரணமாகும். மாநில அரசின் வளங்களைப் பொறுத்தவரை கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 2022-23ல் வருவாய் 17.47 சதவீதம் அதிகரித்துள்ளது. வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் அதிகரிப்பே இதற்கான காரணமாகும்.
வருவாயில் நேரடி வரி வருவாய் பெரும் பகுதியாக உள்ளது. இதில் மாநில ஜிஎஸ்டி ரூ.53,823 கோடியும், விற்பனை, வர்த்தகம் போன்றவற்றின் மீதான வரிகள் ரூ.59,143 கோடியும் அடங்கும். கடந்தாண்டுடன் ஒப்பிடும்போத வரி அல்லாத வருவாய் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதி பயன்பாட்டை பொருத்தவரை வருவாய் செலவினம் கடந்தாண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தாண்டில் ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் (23 சதவீதம்), பொதுக்கல்வி (16 சதவீதம்), கடன்களுக்கான வட்டி (13 சதவீதம்) போன்ற செலவுகளின் அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாகும். அதேபோல் 2018-19 நிதியாண்டில் வருவாய் செலவினத்தில் 56 சதவீதமாக இருந்தது. இது 2022-23ல் 52 சதவீதமாக இருந்தது. தவிர்க்கவியலாத செலவினங்கள் ஆண்டொன்றுக்கு 9.99 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் அதிகரிப்பு.
* 2018-19 நிதியாண்டில் ரூ.16,30,209 கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2022-23ம் நிதியாண்டில் ரூ.23,64,514 கோடியாக அதிகரித்தள்ளது. 2021-22ம் நிதியாண்டை விட 2022-23 நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16 சதவீதம் அதிகரிப்பு.
* தமிழ்நாட்டின் தனிநபர் ஜிடிபி ரூ.3,08,020 : தேசிய தனிநபர் ஜிடிபி ரூ.1,96,983 உள்ளது.
* 2021-22ம் நிதியாண்டில் ரூ.1,60,324 கோடியாக இருந்த சொந்த வரி வருவாய், 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,88,945 கோடியாக அதிகரிப்பு.
* மொத்த வருவாய் வரவு ரூ.2,07,492 கோடியில் இருந்து ரூ.2,43,749 கோடியாக அதிகரிப்பு.
* 2021-22ம் ஆண்டில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2022-23 நிதியாண்டில் ரூ.36,215 கோடியாக குறைவு.
* 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.6,91,591 கோடியாக உள்ளது.
The post கடந்த 2022-23 நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16 சதவீதம் அதிகரிப்பு: தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளர் ஜெய்சங்கர் பேட்டி appeared first on Dinakaran.