மகாகவி பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். எனவேதான், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழின் பெருமையை உலகறியப் புகழ்ந்து பாடினார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையில் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டு, “இந்தியா” என்ற வார இதழையும், “பாலபாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். “கண்ணன் பாட்டு“, “குயில் பாட்டு“, “பாஞ்சாலி சபதம்“போன்ற காவியங்களைப் படைத்தார். கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார். மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ்ச் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவற்றைப் படிப்பவர் உள்ளத்தை ஈர்த்து உயிரோட்டமாய் உலவும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், மகாகவி பாரதியார் அவர்களை, “மக்கள் கவி” என்று போற்றினார். மகாகவி பாரதியார் பாடல்கள் மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டியதால் ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்ய முயன்றது. ஆனால், பாரதியார் ரயில் மூலம் தப்பி புதுச்சேரி சென்று வாழ்ந்தார். பின்னர், சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில், 12.5.1973 அன்று அரசுடைமையாக்கி அதனை நினைவு இல்லமாக மேம்படுத்தி திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகாகவி பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாகச் செப்டம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாள் – எனக் கடைப்பிடிக்கப்படும் என 10.9.2021 அன்று அறிவித்து நடைமுறை படுத்தியுள்ளார்கள். மேலும், அன்று 14 அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
அவற்றுள் பாரதி இளம் கவிஞர் விருது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடுதல், காசியில் அவர் வாழ்ந்த வீடு அரசின் சார்பில் பராமரிக்கப்பட நிதியுதவி வழங்குதல், பாரதியார் படைப்புகளை நாடகங்களாகவும், குறும்படங்களாகவும் வெளியிடுதல் முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும். மகாகவி பாரதியார் பிறந்த நாளான, டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மகாகவி பாரதியார் பிறந்த நாளான 11.12.2024 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
The post மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்த நாள்; பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.