பரிகாரமாக அந்தணர்களுக்கு நீ நிலம் தரவேண்டும் என பிரகஸ்பதி பரசுராமரிடம் கூறினார். உடனே பரசுராமர் வருணனின் உதவியை நாடினார். உனக்கு சிவன் வழங்கிய மழுவை உன் சக்தி கொண்ட மட்டும் கடலில் எறி. அது விழுந்த இடம் வரை கடலை உள் வாங்கி, அந்த பகுதியை மேடாக்கி உனக்கு தருகிறேன். அதனை நீ அந்தணர்களுங்கு வழங்கு, உன் பாபம் முடிவுக்கு வரும் எனக்கூறினார். பரசுராமனும் அதனை ஏற்று தன் மழுவை தூக்கி எறிந்தார். அது கடலில் பெரும் பிளவை ஏற்படுத்த ஒரு பகுதி பிரிந்து தனி மேடானது. அதுதான் இன்றைய கேரளா.
அந்தணர்களிடம் அதனை ஒப்படைத்து இங்கு பயிரிட்டு உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள் எனக்கூறி சென்றுவிட்டார். ஆனால் சில காலம் கழித்து தாம் கொடுத்ததை பார்க்க வந்தவருக்கு அதிர்ச்சி. மக்கள் இடத்தையே காலி செய்து கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் காரணம் கேட்டார் பரசுராமர்.
பூமி முழுவதும் உப்பு, எது பயிரிட்டாலும் வரவில்லை. இந்த இடம் எங்களுக்கு வேண்டாம் எனக் கூறினர். திகைத்த பரசுராமர், சிறிது காலம் இங்கே இருங்கள் பிரச்னைக்கு முடிவு கட்டுகிறேன் என கூறி அவர்களை சமாதனப்படுத்தி அங்கேயே திருமாலை பிரார்த்தித்தார். திருமாலும் காட்சி தந்து பாம்பு இருக்கும் இடமே வளமாக இருக்கும். அதனால் நாகராஜனின் உதவியை நாடு, அவர் உனக்கு உதவுவார் எனக்கூறி மறைந்து விட்டார்.
அதனை ஏற்று பரசுராமரும் நாகராஜாவை பிரார்த்திக்க இடம் தேடி அலைந்தார். தென் பகுதியில் கடலோரம் அருகே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, தீர்த்த சாலை அமைத்து கடும் தவத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நாகராஜா தரிசனம் தந்தார். அவரிடம் பரசுராமர் இந்த பூமியை வளமாக்க உதவ வேண்டும் எனக் கோரினார். நாகராஜாவும் அப்படியே எனக்கூறி மூர்க்கத்தனமான பாம்புகளை வரவழைத்து, அவை தங்களுடைய கால்கா விஷத்தை இந்த பகுதியில் கக்கவேண்டும் என கட்டளையிட்டார். அவையும் தங்கள் ராஜாவின் கட்டளைப்படி விசத்தை கக்கியது. அதனால் அந்த பகுதியே வளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேல கூறிய தீர்த்த சாலா தான் இன்று மன்னார் சாலா என்று அழைக்கப்படுகிறது.
இனி வேறு ஒரு கதைக்குப் போவோம்.இந்த பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இந்த சூழலில் திடீர் காட்டுதீ ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த அந்த தீயால் அங்கு வசித்த பாம்புகள் வாழவே தினறின. தீ குறைந்து முடிவுக்கு வந்த போது பாம்புகள் சில தீக்காயம் பட்டு துடித்துக் கொண்டிருந்தன. இதனை பார்த்த குழந்தை இல்லாத அந்த பெண் உடனே தன் வீட்டிற்கு ஓடிச் சென்று நெய், மஞ்சள் பொடி, தேங்காய் சாறு என பலவற்றை பூசி அவற்றை குணப் படுத்தி காட்டினுள் விட்டாள்.
அன்றிறவு கனவில் நாகராஜா தோன்றி, உனக்கும் கர்ப்பம் தரித்து குழந்தைகள் பிறக்கும். அதில் முதலில் ஐந்து தலை நாகம் பிறக்கும், அடுத்து ஒரு மகன் பிறப்பான் எனக்கூறி மறைந்து விட்டார். அந்த பெண் மணியும் கர்ப்பமானார், நாகராஜா கூறிய படியே முதலில் ஐந்து தலை நாகமும், அடுத்து மகனும் பிறந்தான். குழந்தைகளில் ஐந்து தலை நாகத்துக்கு முத்தாசன் எனவும் மகனுக்கு அப்பாப்பன் எனவும் பெயர் சூட்டியிருந்தாள்.
இருவரும் வளர்ந்தனர், அந்த காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள் அல்லவா?!. அதனால் குழந்தைகளிடம் திருமணம் செய்து வைக்கவா என கேட்டாள்? முத்தாசன் தன்னால் இனி இந்த உலகில் வாழமுடியாது எனவும், பாதாள உலகம் செல்கிறேன், நீ என்னைப் போல் ஐந்து தலை நாகசிலை செய்து வைத்து வழிபடு. எப்படி உனக்கு மகப்பேறு கிடைத்ததோ அதே போல் என்னை மனமுருகி பிரார்த்திப்பவர்களுக்கும் பிள்ளைப் பேறு பாக்கியம் வழங்குவேன். என்னுடைய இந்த கோயிலுக்கு, நீ தான் பூஜை செய்யவேண்டும். பிற்காலத்திலும் பெண்களே பூஜை செய்யவேண்டும் எனக்கூறி மாயமாய் மறைந்து பாதாள உலகத்தில் இன்றும் வாழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதன்படி இன்றும் அந்த தாய் வழி வாரிசு பெண்மணி தான் பூஜை செய்து வருகிறார். இந்த தாயை வலிய அம்மா என அழைக்கின்றனர். பக்தர்கள் 5 தலைநாகம் பாதாள உலகத்தில் தவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். நாகதோஷம் இருந்தால் தீராதவியாதி, தரித்திரம், குழந்தை பாக்கியமின்மை மற்றும் திருமண தடை என பல ஏற்படும்.இவற்றிற்கு பரிகாரம் பூஜை செய்து நாக சிலையை பிரதிர்ஷ்டை செய்ய வேண்டும். இப்படி இந்த கோயிலில் 30000க்கும் மேற்பட்ட நாக சிலைகளை பக்கவாட்டில் மரங்களில் சுற்றி என எங்கெங்கும் காணலாம். இந்த கோயிலுக்கென்று சிறப்பு வழிபாடு ஒன்று உண்டு. அதன் பெயர் உருளி கவிழ்த்தல்..!
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வெண்கல உருளி வாங்கி மனமாற பிரார்த்தித்து, பூஜை செய்யும் அம்மாவிடம் கொடுத்தால், அவர் அதற்கு பூஜை செய்து கவிழ்த்து வைப்பார். வேண்டிய பெண்மணிக்கு குழந்தை பிறந்து சற்று வளர்ந்தும், வெள்ளியில் செய்த ஒரு பாம்பு உருவத்தை வாங்கிவந்து தருகின்றனர். அதற்கு அம்மா பூஜை செய்து ஏற்கனவே கவிழ்த்து வைத்த பாத்திரத்தை நிமிர்த்துகின்றனர்.
பொதுவாக நாக கோயில்களில் புரட்டாசி மாத ஆயில்யம் ரொம்ப விசேஷம். ஆனால் இங்கு ஐப்பசி ஆயில்யம் தான் விசேஷம். இதற்கு ஒரு காரணம் உண்டு.ஒரு தடவை திருவாங்கூர் மன்னருக்கு பல வேலைகள் இருந்ததால், புரட்டாசி ஆயில்ய விழாவுக்கு வர இயலவில்லை.இதனால் நிகழ்ச்சியே ஐப்பசி ஆயில்யத்துக்கு மாற்றப்பட்டது. மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி, அதன்படி தற்போது இன்றுவரை ஐப்பசி ஆயில்யத்தில் தான் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கான மொத்த செலவையும் மன்னர் தான் ஏற்கிறார். அதே சமயம் புரட்டாசி ஆயில்யமும், மாசி ஆயில்யமும் சாதாரண விழாவாக கொண்டாடப்படுகின்றன. கோயிலில் நாகதோஷம் சார்ந்து பூஜைகள் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்க நடக்கின்றன. உதாரணமாக;
செழிப்புக்கு: கும்பம் வைத்து பூஜை
கல்வி மற்றும் சுபிட்சத்துக்கு: பட்டு, தானியங்கள்,
உடல் நலத்துக்கு: உப்பு வைத்து பூஜை என பல நடக்கிறது.
பக்தர்கள் மஞ்சள், மிளகு, சிறு பயிறு என படைக்கிறார்கள்.
இனி கோயிலுக்கு போவோமா?!
3000ஆண்டுகள் பழையது. கோயில் வழக்கமான கேரள பாணியில் மரங்கள் சூழ காட்டின் நடுவில் உள்ளது. முதலில் மூலவரை தரிசிக்கிறோம் ஐந்து தலை நாகம் தான் மூலவர். எளிமையாக அழகாக உள்ளது. இவரை பிரம்மா, விஷ்ணு, சிவனின் இனைந்த அவதாரம் என்கின்றனர். பயபக்தியுடன் தரிசிக்கிறோம். இங்கு சிவராத்திரி விசேஷம். கோயிலே சிவ ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது என்கின்றனர். அடுத்து பிரதான கோயிலின் வடக்கு பகுதியில் சர்ப்பயக்ஷியம்மா பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளார்.இவர் நாகராஜாவின் மனைவியாக அறியப்படுகிறார். இந்த இருவருக்குமே தினசரி பூஜை உண்டு. அடுத்து நாகயக்ஷியம்மாவின் சன்னதி. இவரும் நாகராஜாவின் துனைவி என கூறுகிறார்கள். மன்னார்சாலா அம்மையார் தினசரியும் ஆயில்ய நாட்களிலும் பூஜை செய்கிறார்.
அடுத்து நாக சாமுண்டியம்மாவை பார்த்து தரிசிக்கிறோம். இவர் நாகராஜாவின் சகோதரியாம். இவருக்கு ஆயில்ய நாட்களில் பூஜை உண்டு. மன்னார்சாலா அம்மையார் கோயிலின் தலைமை அர்ச்சகர். உருளி கவிழ்ப்பு பூஜையை உருளி கமாழ்த்து என அழைக்கின்றனர். சர்ப்ப தோஷங்கள், ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவற்றிற்கு செய்யும் பூஜைக்கு நூரும்பலும் என அழைக்கின்றன. கோயிலில் துலாபாரம் உண்டு. வாழைப்பழம், வெல்லம், பால் போன்றவை ஏற்கப்படுகிறது.
சர்ப்பபலி பூஜை, அஷ்ட நாக பூஜை (வாசுகி தொடங்கி எட்டு நாகங்களுக்கு பூஜை) ஆகியவையும் இங்கு நடக்கின்றது. கோயிலினுள் பாதாள அறை உள்ளது. அதில் நாகபாம்பு மகன் இருப்பதாக ஐதீகம். வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளே ஆண்கள் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு. கோயிலில் தர்ம சாஸ்தா, பத்ரகாளி ஆகியோரும் உள்ளனர். விழாக்களாக, சிவ ராத்திரி, நாக பஞ்சமி, கும்பம்,கன்னி, துலாம் ஆயில்யங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சந்தன காப்பு மற்றும் இளநீர் அபிஷேகங்களும் இங்கு சிறப்பு வாய்ந்தவை.
கோயில் திறப்பு: காலை: 5.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை: 5.30 மணி முதல் 8.30 மணி வரை. தொடர்புக்கு: 479-2413214.எப்படி செல்வது: கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் காயங்குளத்தில் இருந்து சுமார் 16கி.மீ தூரம் பயணித்தால் மன்னார்சாலை நாகராஜா கோயிலை அடைந்து விடலாம்.
ராஜி ராதா
The post நாகதோஷத்தை போக்கிடும் நாகராஜர் appeared first on Dinakaran.