திருப்பூர், டிச.10: திருப்பூர் மாநகராட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்பப் பெறக்கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர்,கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவிச்சந்திரன், விசிக வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ஜே.அபுசாலி,மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்தும், பாதாள சாக்கடைக்கு தனித்தனி வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த அனைத்து கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
The post சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி திருப்பூரில் அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.