×

ஆஸி.க்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட்டிலும் பும்ரா ஆட வேண்டும்: கவாஸ்கர் அறிவுறுத்தல்

அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி பல்வேறு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில் 30 ஓவர்களையும், 2வது டெஸ்ட் போட்டியில் 24 ஓவர்களையும் வீசி இருக்கிறார். 2வது டெஸ்ட் போட்டியின் போது திடீரென காலில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. இதனால் வேலைப்பளுவை மனதில் வைத்து பும்ராவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இல்லையென்றால் பும்ரா காயமடைய வாய்ப்பு இருப்பதாவும் எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் வேலைப்பளு என்ற பேச்சிற்கே இடமில்லை. அவர் காயமடையவில்லை என்றால், கட்டாயமாக 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி வெறும் 2.5 நாட்களில் முடிவடைந்துவிட்டது. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 5 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. ஒருவேளை அவருக்கு கால்களில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, அவருக்கு ஓய்வளிப்பதில் எந்த எதிர்ப்பும் இருக்காது. ஆனால் காயமின்றி ஓய்வு அளிக்க தேவையில்லை. ஏனென்றால் பும்ராவுக்கு 4 ஓவர்கள் அல்லது 5 ஓவர்கள் கொண்ட ஸ்பெல் தான் அளிக்கப்படுகிறது. பும்ராவை அப்படிதான் பயன்படுத்த வேண்டும். விக்கெட் வீழ்த்தி இருந்தால் மட்டுமே சில ஓவர்களை கூடுதலாக வீசுகிறார்.

அவரின் 5வது ஓவரில் விக்கெட் வீழ்த்தப்பட்டால், 6வது ஓவரை வீசலாம்.இந்திய அணி அவரை சுற்றி தான் இயங்குகிறது. அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால், ஆஸ்திரேலியா அணியின் 20 விக்கெட்டுகளை இந்திய அணி பவுலர்கள் வீழ்த்தும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பும்ரா பவுலிங் செய்ய அழைக்கப்படும் போது, அவரின் தாக்கம் அதிகமாக இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்’’ என்றார். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நடைபெற்றுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜஸ்பிரிட் பும்ரா, மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆஸி.க்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட்டிலும் பும்ரா ஆட வேண்டும்: கவாஸ்கர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Aussies ,Gavaskar ,Adelaide ,Sunil Gavaskar ,India ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியாவுடனான 3வது டெஸ்டில் ஸ்மித், ஹெட் அதிரடி சதம்