ஊட்டி, டிச.9: நீலகிரி மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.35 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வக இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். நீலகிரி மாவட்டம், ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் மருந்துத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆய்வக இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.11.35 லட்சம் மதிப்பீட்டில் 25 ஆய்வக இயந்திரங்களை ஆய்வக நுட்புநர்களிடம் வழங்கினார்.
இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை மற்றும் மருந்துத்துறையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும், பொதுமக்களின் சிகிச்சையை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.35 லட்சம் மதிப்பிலான 25 ஆய்வக இயந்திரங்கள் (Semi Auto Analyser) ஆய்வக நுட்பநர்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வக இயந்திரங்களின் மூலம் சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் என பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் ராஜசேகர், துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப்பணிகள்), கனகராஜ் (காசநோய்), வட்டாட்சியர் சங்கர்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.11.35 லட்சத்தில் ஆய்வக இயந்திரங்கள் appeared first on Dinakaran.